ஜெபிக்காத நாட்கள் வீணான நாட்கள்
மாற்கு 11: 11-26
வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் எல்லா நாட்களையும் பலன்தரும் வகையில் வாழ்வதில்லை. பல நாட்கள் வீணான நாட்களாகவே கடந்து போகின்றன. வீணான நாட்கள் அனைத்தும் குற்றயுணர்வை நமக்குள்ளே ஏற்படுத்தி நம்மை குத்துகின்றன. வீணான நாட்கள் அனைத்தும் நம்மை பார்த்து முறைத்துப் பாத்ததுண்டு. ஏன் இப்படி வீணாக்கிவிட்டாய் என்று. எல்லா நாட்களையும் பலன் கொடுக்கும் வகையில் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த நம் ஆசை இன்றைய நற்செய்தி வாசகத்திலே அடங்கிப்போகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு ”நீங்கள் இறைவனிம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள், நீங்கள் கேட்டபடியே நடக்கும்(மத்11:24) என்கிறார். நாம் ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கி ஜெபித்து விட்டு நாளைத் தொடங்குகிற போது அந்த நாள் பலன்தரும் நாளாகவும் குற்றயுணா்வை போக்குகிற நாளாகவும் நம் குறிக்கோளை விரட்டி பிடிக்கிற நாளாகவும் அமைகிறது. ஆசையை ஜெபிப்பதில் காட்டுவோம். ஆர்வத்தை அனுதினமும் ஆண்டவரோடு உறவாடுவதில் வெளிப்படுத்துவோம். இதன் வழியாக வீணான நாட்கள் என்று ஒன்று இல்லாமல் ஆக்குவோம்.
மனதில் கேட்க…
- இன்று ஜெபித்தேனா? இனி ஜெபிப்பேனா?
- ஜெபிக்காத நாட்கள் வீணான நாட்களே – இது மிகவும் சரிதானே?
மனதில் பதிக்க…
ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும், வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன். (திபா5:3)
– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா