சோர்ந்திருப்பவர்களே! – உங்கள் சோகம் மாறும்
மத்தேயு 11:28-30
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கணக்கெடுப்பு நடத்தி எத்தனை மனிதர்கள் சோர்வில்லாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே நம் கண்களில் தென்படுவார்கள். சோர்வை தவிர்த்து சுறுசுறுப்போடு வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நல்லாலோசனைகளை வழங்குகிறது. அவற்றில் இரண்டு மிக மிக முக்கியமானது.
1. கடவுளை பிடித்தல்
கடவுளை நெருங்கி வர வர நம் உள்ளத்தில் பிரகாச ஒளி எரிய ஆரம்பிக்கிறது. அந்த பிரகாச ஒளி நம்மிடம் நெருங்கி வரும் சோர்வை விரட்டுகிறது. நம் உடல் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் செல்கள் வளர்கின்றன. உடல், மனம், ஆன்மா இவையனைத்தும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கின்றன. கடவுளைப் பற்றி பிடிக்கும் போது ஆற்றலும், ஆனந்தமும் அவைகளாகவே வந்து தங்குகின்றன.
2. கழிவானதை விடுதல்
நம் மனசாட்சி ஒருசில தவறான செயல்களை நாம் செய்யும்போது நமக்கு நன்கு அறிவுறுத்தும் இது கழிவு இதை தொடாதே என்று. அப்படி மனசாட்சி அறிவுறுத்தும் நிலையில் நாம் அந்த தவறான அதாவது கழிவான செயல்களை செய்யவில்லை என்றால் நாம் நலமாக இருப்போம். சுறுசுறுப்பாக இயங்குவோம். எப்போது மனசாட்சியின்படி செயல்டவில்லையோ நாம் கழிவை தொடுகிறோம். தொட்ட பிறகு ஆபத்துதான். அந்த கழிவான செயல் கண்டிப்பாக நமக்கு சோர்வையும், மனஅழுத்தத்தையும் கொண்டுவந்தே தீரும்.
மனதில் கேட்க…
1. கடவுளின் கரம் பிடித்தால் சோகம் என்னை தீண்டாது இது தெரியுமா?
2. கழிவானது எனக்கு கண்டிப்பாக சோர்வையும், மனஅழுத்தத்தையும் கொண்டு வந்தே தீருமல்லவா?
மனதில் பதிக்க…
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்(மத் 11:28)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா