சொன்ன சொல் மாறாது நடப்போம்
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
அன்பானவர்களே! நாம் பேசுவதற்கு முன் நிறைய தடவை யோசித்து பேசவேண்டும். நம் விருப்பப்படி எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை நினைத்து நாம் மனம் கலங்குகிறோம்.
மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்புநாளில் கணக்கு கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள், உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளியாகவும் கருதப்படுவீர்கள் என்று மத்தேயு
12:36,37ல் வாசிக்கிறோம். நம் சொல்லில் நாம் சிக்கிக் கொள்ளாத படிக்கு சில வேளைகளில் அமைதியாக இருந்து பொறுமையை கடைப்பிடித்தால் அதனால் நாம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். நீதிமொழிகள் 6:2.
நம்முடைய சொல் எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். பொல்லாங்கான பேச்சு அருவருப்பு. நம் சொற்கள் ஆழ்கடல் போன்றவை. அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம். ஞானம் சுரக்கும் ஊற்று. நீதிமொழிகள் 8:7; 18:4.& 16:24. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தரும்.
ஆதலால் பிரியமானவர்களே நம்மால் கூடுமட்டும் உண்மையை சொல்லி அதையே செயல்படுத்தி நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்போம். அதனால்தான் யாக்கோபு 1:19 ல் இவ்வாறு
வாசிக்கிறோம். என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இதை தெரிந்துக்கொளுங்கள்: ஒவ்வொருவரு ம் கேட்பதில் வேகமும் பேசுவதிலும், சினங்கொள்வதிலும் தாமதம் காட்ட வேண்டும். நாம் அன்போடும் பொறுமையோடும் பணிவோடும் சொன்னால் கேட்காதவர்களும் கேட்பார்கள்.
ஆனால் நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம்.பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர்கள். யாக்கோபு 3:2 ..
ஆண்டவர் தம்மை சிலுவையில் அடித்தவர்களை மன்னித்து நேசித்தது பொல நாமும் நம் எல்லா சொல்லிலும் பொறுமையாக இருந்து என்ன துன்பம் வந்தாலும் சகித்துக்கொண்டு சொன்ன சொல்
மாறாது நடந்து கடவுளை மகிமைப்படுத்துவோம்.
ஜெபம்
————–
இரக்கமுள்ள இறைவா! எங்கள் வாயில் சொல் உண்டாகும் முன்னே அதை நீர் அறிந்திருக்கிறீர். வீணான வார்த்தைகளை பேசி யாருடைய மனதையும் புண் படுத்தாதபடிக்கு எங்களை காத்துக்கொள்ளும். உமது கிருபையை எங்கள்மேல் பொழிந்தருளும். உம்மைப்போல பேசவும்
நடக்கவும் கற்றுத்தாரும். எங்கள் ஜெபம் உமக்கு பிரியமாய் இருக்கட்டும். எங்கள் சொல்லால் நாங்கள் சிக்கிக்கொள்ளாதபடிக்கு நீரே எங்களுக்கு போதித்து வழிநடத்தும். எங்கள் விண்ணப்பத்தை கேட்டருளும். பொய்யை வெறுத்து உண்மையை பேசி யதார்த்தமாய்
வாழ உதவி செய்யும். துதி, கனம், மகிமை, புகழ் , யாவும் உமக்கே செலுத்துகிறோம்.
ஆமென்!! அல்லேலூயா!!!.
ஆமென்!! அல்லேலூயா!!!.