சேர்ந்து உண்பதேன் ?
லேவியின் வீட்டில் இயேசு விருந்துண்டபோது, வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர் என்னும் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு. காரணத்தோடுதான் அவ்வாறு செய்துள்ளார். தொடர்ந்து, மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் சீடரிடம் இவ்வாறு பாவிகளோடு சேர்ந்து விருந்துண்பதேன் என்னும் கேள்வியை எழுப்புவதையும் பதிவுசெய்துள்ளார். அதற்கான விடையை இயேசு அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இயேசு உணவு உண்பதை, விருந்தில் பங்கேற்பதை வயிற்றை நிரப்பும் நிகழ்வாகவோ, உடல் தேவையை நிறைவுசெய்யும் உடலியல் செயல்பாடாகவோ கருதவில்லை. மாறாக, ஒவ்வொரு விருந்தும் சமூக, இறையியல் பொருளுள்ள நிகழ்வுகள் என்பதனை எடுத்துக்காட்டினார். விருந்தின் வேளைகளில்தான் இயேசு சமூக மாற்ற அருளுரைகளை, அறிவுரைகளை வழங்கினார். சக்கேயு போன்றோரின் மனமாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார். இறுதியாக, விருந்தின் வேளையில்தான் நற்கருணை, குருத்துவம் என்னும் அருள்சாதனங்களை நிறுவினார்.
நமது உணவு வேளைகள் எப்படி இருக்கின்றன? இயேசுவைப் போலவே நாமும் உணவின் வேளைகளை உறவின் நேரங்களாக, சமத்துவத்தின் நேரங்களாக, நலப்படுத்தும் வேளைகளாக மாற்றுவோம். குடும்பத்தில், பணியகத்தில் இணைந்து உண்போம், இறைநெறி காண்போம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாள்தோறும் நீர் வழங்கும் உணவுக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் உணவின் வேளைகள் உமது அருளை உணரும் நேரங்களாக அமைவதாக, ஆமென்.
~பணி குமார்ராஜா