செல்வத்தின் பயன்பாடு
செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம்.
செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான், நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம். எப்படி ஊதாரித்தமாக ஊதாரி மைந்தன், தன்னுடைய தந்தையின் சொத்துக்களை அழித்தானோ, அதேபோல இந்த பணியாளரும் தன்னுடைய தலைவருடைய சொத்துக்களை ஊதாரித்தனமாக, தவறாகப் பயன்படுத்தி அழிக்கிறான். அது தலைவருக்குத் தெரிய வருகிறபோது, அதனை அவன் ஈடுகட்டுகிறான். எப்படி ஈடுகட்டுகிறான் என்பதில் தான் விவிலிய அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு வருகிறது. அந்த பணியாள், தனக்கு வரக்கூடிய வருமானத்தை(Commission) தள்ளுபடி செய்ததாகவும், அதனால் தலைவர் அவருடைய விவேகத்தைப் பாராட்டியதாகவும் பொதுவாகச் சொல்லப்படுகிறது.
செல்வத்தைப் பயன்படுத்தி நமது வாழ்வை மேம்படுத்தாமல், மற்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை நாம் உயர்த்த முயற்சி எடுப்போம். செல்வம் என்பது கடவுள் நமக்குத்தரக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம். அதனை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்