செயல்பாடுள்ள கிறிஸ்தவர்கள்
இயேசு வாழ்ந்த காலம் புதுமைகளுக்கு பெயர் போன காலம். பல போதகர்களால் புதுமைகளும் அற்புதங்களும் அரங்கேறின. புதுமைகள் பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருந்தன. பல நோய்கள் உளவியல் நோய்களாக இருந்தன. கடவுளின் பெயரைச்சொல்லி வேண்டுகிறபோது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, பல பேருக்கு சுகத்தை கொடுத்தது. இந்த பிண்ணனியில் தான், நாம் இந்த நற்செய்தி வாசகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
தொடக்ககால திருச்சபை தலைவர்கள், புதுமைகளை மறுக்கவில்லை. தொடக்ககால திருச்சபையில் இயேசுவை நம்பாத சிலரும், உதட்டளவில் இயேசுவின் பெயரைச் சொல்லி, பல பேய்களை ஓட்டினர். ஆனால், கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெயரைச் சொல்லி காரியம் சாதிக்கிறபோது, அதற்கான விளைவை, அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயேசு கொடுக்கிற எச்சரிக்கை செய்தி. புதுமைகள் செய்வதனாலோ, கடவுளின் பெயரால் காரியங்கள் சாதிப்பதனாலோ, ஒருவர் கடவுளுக்கு உகந்தவர் ஆகிவிட முடியாது. கடவுளுக்கு ஒருவர் உகந்தவர் ஆக வேண்டுமென்றால், கிறிஸ்தவத்தை முழுமையாக வாழ முயற்சி எடுக்க வேண்டும். அதைத்தான் இயேசு நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.
வெறும் வார்த்தைகள் செயல்பாடுகளுக்கு இணையானதாக மாறிவிட முடியாது. செயல்பாடுகள் தான் ஒருவருடைய தரத்தை நிர்ணயிப்பதாக இருக்கிறது. ஆக, கிறிஸ்தவம் என்பது செயல்பாடுகளுக்கு முன்னுரிமையும், முதன்மையான இடத்தையும் கொடுப்பதாக அமைய வேண்டும். செயல்பாடுகள் நிறைந்த கிறிஸ்தவர்களாக நாம் மாறுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்