செயல்பாடுகளும், எண்ணங்களும்
நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறபோதும், நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கிறபோதும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறபோதும் அதனை நாம் உடனே செய்ய வேண்டும். பல வேளைகளில் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் செய்வதில்லை. அந்த கணம் மறைந்தபிறகு, அதனை நிச்சயமாக செய்ய முடியாது. அதேபோல ஒருவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் சொல்லவில்லை என்றால், அந்த கணம் மறைந்துவிடும். அதற்கு பிறகு அதேபோ ஒரு தருணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அதேபோலத்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும், நாம் உடனடியாக இரக்கம் காட்ட வேண்டும். அல்லது நாம் அதைச்செய்யவே முடியாது.
இதுதான் இன்றைய நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்பற்ற ஒருவன் விரும்புகிறான். அவன் உடனடியாக பின்பற்றுவதற்கு தயங்குகிறான். அதற்கு பல காரணங்களையும் சொல்கிறான். இயேசுவின் அனுபவத்தில் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த கணம் மறைந்துபோனால், மீண்டும் அவனுக்கு அந்த வாய்ப்பு வராது. எனவேதான், அவன் தன்னுடைய அழைப்பில் நிலையாக இருக்க அவனுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் இயேசு சொல்கிறார். அவனை, கொண்ட எண்ணத்தில் உறுதியாக நிலைத்திருக்க அறிவுறுத்துகிறார்.
நமது வாழ்வில் நாம் நல்லவர்களாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். நமக்குள்ளாக பல நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் இருக்கிறது. அவற்றை செயல்படுத்துவதற்கு நாம் முயற்சி எடுக்கிறோம். ஆனால், அதற்கு காலம் கடத்துகிறோம். அந்த காலம் கடந்துபோன பிறகு, நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதனை மீண்டும் செய்ய முடிவதில்லை. இவ்வாறு, பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று நாம் நினைத்திருந்தாலும், இப்படி பல காரியங்கள் தடைப்பட்டு நின்று இருக்கிறது, எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்க கடவுள் அருள் வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்