செப உணர்வு
செபத்தின் வல்லமையைப் பற்றி இயேசு, இந்த நற்செய்தியிலே (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15) நமக்கு தனது சிந்தனையைத் தருகிறார். ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தைநோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம்? என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள்.
ஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள். நான்கு வகையான மக்களின் செபம் கேட்கப்படாது, என்று பொதுவாக மக்களால் நம்பப்பட்டது. கொலைகாரர்கள், பரிகாசம் செய்கிறவர்கள், பொய்யர்கள் மற்றும் வெளிவேடக்காரர்கள். எனவே, வெளிவேடத்தனத்தோடு நாம் செபிக்கக்கூடாது. அப்படியென்றால், எப்படி செபிக்கலாம்? என்பதை இயேசு கற்றுத்தருகிறார். செபம் என்பது கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட கூடியதாக இருக்க வேண்டும். அது புகழ்ச்சியாக இருக்கலாம், நன்றியாக இருக்கலாம், ஆராதனையாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் கடவுளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அதேபோல, கடவுள் அன்பானவர் என்கிற உணர்வு நமக்குள்ளாக இருக்க வேண்டும். அந்த உணர்வோடு நமது செபம் எழுப்பப்பட வேண்டும்.
நாம் கடவுளிடத்தில் செபிக்கிறபோது, இத்தகைய உணர்வுகள் நம்மிடத்தில் இருக்கிறதா? நமது செபங்கள் உண்மையான உணர்வுகளோடு, கடவுளை மையப்படுத்தி ஒப்புக்கொடுக்கப்படுகிறதா? கடவுளுக்கு உரிய மகிமையும், மாட்சிமையும் கொடுக்கப்படுகிறதா? சிந்திப்போம், செயல்படுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்