செபம் செயலாகட்டும்
JESUS TODAY என்ற நூலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார். மனிதனுக்குள் மூன்று வகையான ஆற்றல் உள்ளது. உடல் ஆற்றல், உள்ள ஆற்றல் மற்றும் ஆன்ம ஆற்றல் எல்லாருமே முதல் இரண்டு வகை ஆற்றலில் மிகச் சிறந்தவர்களாக விளங்குகின்றார்கள். ஆனால் மூன்றாவது வகை ஆற்றலை பெற தடுமாறுகின்றார்கள். ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டுந்தான் இந்த மூன்றாவது வகை ஆற்றலில் சிறந்தவராக விளங்குகின்றார். அவர் தாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் தான் அவரால் பல புதுமைகளும், வல்ல செயல்களும் செய்ய முடிந்தது. அவர் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார் என்ற கேள்விக்கு விடையையும் ஆசிரியர் அந்த நூலின் இறுதி பக்கத்தில் தருகின்றார். அதாவது செபத்தின் வழியாக அவர் அந்த ஆற்றலை பெற்றதாக கூறுவார்.
அத்தகைய ஆற்றலின் விளைவைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம், இயேசு நோயாளர்களைக் குணப்படுத்துவதை. விவிலிய அறிஞர்கள் இயேசுவின் புதுமைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக் காட்டுவர். அதாவது குணமளிக்கும் புதுமை, பேய்களை விரட்டக்கூடிய புதுமை, இயற்கை புதுமை மற்றும் புதுவாழ்வு கொடுக்கக்கூடிய புதுமை. இவற்றுள் குணமளிக்கும் புதுமைகளைத் தான் தன் பணிவாழ்வில் அதிகமாக செய்கின்றார். எதற்காக என்றால் அவனும் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆவல். யாக்கோபு, யோவான், சீமோன் மற்றும் அந்திரேயா நான்கு நபர்களும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள். இவர்கள் இயேசுவுக்கு மிகவும் பரீட்சமானவர்கள் என்பதற்காக இயேசு குணப்படுத்தவில்லை. மாறாக, இவர்களும் புதுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே. இத்தகைய வாழ்வினை அவர் எப்படி கொடுத்தார் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில் மாற்கு குறிப்பிடுகின்றார். அதாவது செபத்தின் வழியாக.
நானும் இத்தகைய ஆற்றலைப் பெற விரும்புகிறேனா? திருமுழுக்குப் பெற்ற அனைவராலும் மற்றவர்களை குணப்படுத்த முடியும். ஆனால் நாம் அத்தகைய சக்தியை உணர்வதில்லை. காரணம் நம்மிடம் செபவாழ்வு இல்லை. செபிப்போமா செபம் செயலாக்கம் பெற.
– அருட்பணி. பிரதாப்