செபத்தின் வல்லமை
இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நற்செய்தி நூல்களில் காணலாம். இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது. 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார். எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை.
2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார். அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால் அசாத்தியமாக செய்ய முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவருடைய செபம். எத்தகைய இடர்பாடுகளையும், இன்னல்களையும் எதிர்த்து நிற்பதற்கு அவருக்கு துணையாக இருந்தது செபம். 3. இறைவனின் அருளைப் பெற உதவும் வாய்க்காலாக இருந்தது. எப்போதெல்லாம் இயேசு நோயாளர்களுக்கு சுகம் தந்தாரோ, அப்போதெல்லாம், அவர் தந்தையிடம் செபித்தார். அவரின் அருளைப் பெற்றுக்கொள்ள செபத்தை வல்லமைமிகுந்த ஆயுதமாகப் பயன்படுத்தினார். இறை அருளைப் பெற்றுக்கொண்டார்.
நமது கிறிஸ்தவ வாழ்வில் செபம் முக்கியத்துவம் மிகுந்தததாக இருக்க வேண்டும். கடவுளோடு நாம் நெருங்கியிருப்பதற்கும், வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும், இறைவனின் சிறப்பான அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இருக்கக்கூடிய செபத்தின் மீது நாம் பற்றுள்ளவர்களாக இருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்