சுயநலமும், பேராசையும்
சாலமோனின் ஞானம் 1: 13 – 15, 2: 23 – 24
இன்றைய வாசகம், இந்த உலகத்தின் யதார்த்தத்தையும், கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, மனிதர்களுக்கு வாழ்வைக் கொடுத்ததன் நோக்கத்தையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும், அதற்கு காரணம் கடவுள் தான் என்று, கடவுள் மேல் பழிபோடுகிற கூட்டம் இந்த உலகத்தில் அதிகம். அதேவேளையில், அந்த துன்பத்திற்கு தன்னுடைய பங்கு ஏதாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்பதற்குக் கூட மனிதர்களுக்கு நேரமில்லை. சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், மனிதர்களின் துன்பத்திற்கு காரணம், இந்த உலகத்தில் காணப்படும் பேராசையும், சுயநலமுமே என்பதை, நாம் அறிந்து கொள்ளலாம்.
சாலமோனின் ஞானம் புத்தகம் சொல்கிறது: “வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை”. கடவுள் இந்த உலகத்தில் சாவை படைக்கவில்லை. மனிதர்கள் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் படைத்தார். ஆனால், மனிதனுடைய பேராசை, அலகையின் வழியாக சாவை இந்த உலகத்திற்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால், கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று தான் படைத்தார். மனிதன் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காககத்தான் படைத்தார். அதனால் தான், தன்னுடைய சொந்த சாயலில் அவர்களைப் படைத்தார். எந்த அளவுக்கு மனிதர்கள் மீது அன்பு கொண்டிருந்தால், கடவுள் அவர்களை, தன்னுடைய சொந்த சாயலில் படைத்திருப்பார். அந்த அன்பிற்கு தீங்கு விளைவித்தது, மனிதனுடைய பேராசை மற்றும் சுயநலம் தான், என்பதை, இன்றைய வாசகம் தெளிவுபடுத்துகிறது.
நம்முடைய வாழ்வின் பெரும்பாலான துன்பங்களுக்கு, நம்முடைய பேராசையும், சுயநலமுமே காரணம் என்பதை, நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்முடைய துன்பத்தை மையப்படுத்தி, நாம் நம்முடைய வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் வெகு எளிதாக இதனைக் கண்டுபிடித்து விடலாம். நம்முடைய துன்பங்களுக்கு காரணமாக அமைந்திருக்கிற, பேராசையையும், சுயநலத்தையும் நாம் விட்டுவிடுவோம். நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்