சீடர்களின் பயிற்சிக்காலம்
சீடர்கள் தங்களது பயிற்சி பணிக்காலம் முடிந்து ஆண்டவரிடத்தில் மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்கிறபோது, நம்பிக்கை இல்லாமல் சென்றார்கள். இயேசுவைப்போல தங்களாலும் புதுமைகள் செய்ய முடியுமா? மக்களின் எதிர்ப்புக்களை மீறி, நற்செய்தி அறிவிக்க முடியுமா? தங்களை மக்கள் மதிப்பார்களா? இயேசுவைப்போல ஞானத்தோடும், அறிவோடும் பேச முடியுமா? போன்ற பல கேள்விகள் சீடர்களின் உள்ளத்தில் எழுந்திருந்தது. ஆனால், வேறு வழியில்லை. இயேசு அனைத்து சீடர்களும் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதனால், அவர்கள் தங்களுக்கு குறிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார்கள். திரும்பி வருகிறபோது, அவர்களது அனுபவம் மகிழ்ச்சியானதாக இருக்கிறதை, சீடர்களின் உற்சாகமான வார்த்தைகளில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒருவிதமான பதற்றத்தோடு, பதைபதைப்போடு பணிக்குச் சென்ற சீடர்கள், மகிழ்ச்சியாக திரும்பி வந்தார்கள். இவ்வளவு நாள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடவுளின் பராமரிப்பைப்பற்றியும், அவரது அளவுகடந்த இரக்கத்தைப்பற்றியும் இயேசு சொல்வதை வெறுமனே கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதுதான் அவர்களே நேரடியாக உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக இது அவர்களுக்கு ஒருவிதமான, புதுமையான அனுபவமாக இருந்திருக்கும். இயேசுவின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த தருணங்களில் இதெல்லாம் நடக்குமா? என்ற சந்தேகம் இருந்திருக்கும். ஆனால், சந்தேகித்தது அனைத்தும் அனுபவமாக, நேரடியாகப் பெற்றதை நினைத்து, அவர்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
சீடர்கள் நம்பிக்கை இல்லாமல் தான் சென்றார்கள். ஆனால், நடக்கிற நிகழ்வுகள், அவர்களையும் அறியாமல் அவர்களது நாவிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் கடவுளின் ஆற்றலையும், அவரது இயக்கத்தையும் அவர்களுக்கு உணர்த்தியது. கடவுளுடைய பணியில் நாம் வெறும் கருவிகள் தான். நாம் திறந்த உள்ளத்தோடு இருப்பது ஒன்று தான், நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது. மற்றதை, கடவுள் பார்த்துக்கொள்வார், என்கிற நம்பிக்கைஉணர்வில் நாம் வாழ, உறுதி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்