சீடத்துவ வாழ்வு
கி.பி. 70 ம் ஆண்டில் யெருசலேம் தரைமட்டமாக்கப்பட்டது. கடவுளின் நகர் தரைமட்டமாக்கப்பட்டபோது, யூதர்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல மூலைகளுக்கும் தப்பி ஓடினர். அவர்களில் பெரும்பாலானோர், தங்களின் இத்தகைய நிலையை எண்ணி, எண்ணி அழுது புலம்பினர். இத்தகைய சமயத்தில், யூதப்போதகர்களின் போதனை ‘ஆண்டவரின் இல்லமே அழிக்கப்பட்டபிறகு, நாம் எதை இழந்தால் என்ன?’ என்பதுதான். இந்தப்பிண்ணனியில் இயேசுவின் வார்த்தைகள் இரண்டு சிந்தனைகளைத்தருகிறது.
1. இயேசுவின் எச்சரிக்கை. இயேசுவைப்பின்பற்ற விரும்புகிறவர்கள், இயேசுவோடு இணைந்து சிலுவையைத்தூக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். வெற்றியின் சுவையை சுவைக்க விரும்புகிறவர்கள் துன்பத்தைக்கண்டு தளரக்கூடாது, பயப்படக்கூடாது, உதறித்தள்ளக்கூடாது. துணிந்து தாங்க வேண்டும்.
2. இயேசுவோடு சிலுவையைத் தூக்குவது துன்பம் அல்ல, மாறாக, இயேசுவின் பணியை நாம் பகிர்ந்து கொள்வது. கடவுளின் மகனாகிய இயேசுவின் பணியைப் பகிர்ந்து கொள்வது நமக்கு எத்தகைய மாட்சியை நமக்குத்தர வேண்டும். அதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
இயேசுவின் சிலுவையிலே பங்கெடுப்பது சாபம் அல்ல, நமக்கு கிடைத்த வாழ்வு. புனிதர்கள் அனைவரும் இதனை நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், இயேசுவின் பாடுகளில் தங்களையே முழுமையாக இணைத்துக்கொண்டனர். நாமும் இயேசுவின் பாடுகளில் நம்மை இணைத்துக்கொள்வோம்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்