சீடத்துவத்தின் சவால்கள்
இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33) கோபுரம் என்று, இயேசு சொல்வது திராட்சைத் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் கோபுரமாக இருக்கலாம். பொதுவாக, பாலஸ்தீனப்பகுதிகளில் திராட்சைத் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக, உயர்ந்த கோபுரங்களை அமைப்பர். அந்த கோபுரம் தங்குமிடமாகவும், திருடர்களிடமிருந்து தோட்டத்தைப் பாதுகாப்பதற்கு வசதியாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கோபுரத்தைக் கட்டி முடிக்காமல், இடையில் விட்டுவிடுவது, ஒருவருக்கு அவமானத்தை தருவிக்கக்கூடியது. அதே போல, இயேசுவைப் பின்தொடர்ந்து விட்டு, இடையில் செல்வது, நமக்கு மிகப்பெரிய அவமானம். இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்னால், நமது பலவீனங்கள், பலம் அவற்றைக் கருத்தில்கொண்டு, நம்மையே தயார்நிலையில் உட்படுத்தி, அவரை பின்பற்ற வேண்டும். ஆனால், இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தபிறகு, எக்காரணத்தைக் கொண்டும், அதனால் ஏற்படும் சவால்களைக் கண்டு பயந்து ஓடக்கூடாது.
இயேசு ஏன் தன்னை முழுமையாகப் பின்பற்ற நம்மைக் கேட்கிறார்? முழுவதுமாக இயேசுவைப் பின்பற்றுவது எளிதான காரியமா? சவால்களை எதிர்கொள்வது கடினமானது அல்லவா, அப்படியிருக்கிறபோது, அது நம்மால் முடியக்கூடிய காரியமா? என்றெல்லாம் நமக்குள்ளாக கேள்விகள் எழும். ஆனால், மனம் இருந்தால் போதும். இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். அவர் நம்மை வழிநடத்துவார் என்பது நாம் பெறக்கூடிய ஆறுதல் செய்தி. இயேசு நான் பின்பற்ற வேண்டும், பின்பற்றுவேன் என்ற உறுதி இருந்தால் போதும், அந்த உறுதி, நம்மை வழிநடத்தும். நீச்சல் பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், தன்னால் நீந்த முடியும், என்று மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் முழுமையாக நீந்த முடியும். அதேபோலத்தான் நமது சீடத்துவ வாழ்வும்.
நமது தனிப்பட்ட வாழ்க்கையில் இயேசுவைப் பின்பற்ற வேண்டும், என்ற ஆசை இருக்கிறதா? அவரை என்னால் பின்பற்ற முடியும், என்ற உறுதி இருக்கிறதா? அப்படிப்பட்ட உறுதி இருக்கிறபோது, கடவுள் என்னை வழிநடத்துவார் என்கிற, விசுவாசம் இருக்கிறதா? சிந்திப்போம். இயேசுவை முழுமையாக, உண்மையாக பின்பற்றுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்