சிலுவையும் மகிமையும்
சிலுவை எப்படி ஒருவருக்கு மகிமையை தர முடியும்? துன்பம் எப்படி ஒருவருக்கு மாட்சிமையாக இருக்க முடியும்? தோல்வி எப்படி ஒருவருக்கு மணிமகுடமாக மாற முடியும்? இந்த கேள்விகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வை நாம் பார்க்கிறபோது, படிக்கிறபோது ஏற்படக்கூடியவை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. சிலுவை மகிமையாக இருந்திருக்கிறது. துன்பம் மாட்சியைத் தந்திருக்கிறது. தோல்வி மணிமகுடமாக மாறியிருக்கிறது. இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அதுதான் கீழ்ப்படிதல். கீழ்ப்படிதல் வாயிலாக நாம் சிலுவையை மகிமையாக மாற்ற முடியும். துன்பத்தை மாட்சிமையாக கொடுக்க முடியும். தோல்வியை மணிமகுடமாக மாற்ற முடியும். அதுதான் இயேசுவின் வாழ்வு நமக்கு கற்றுத்தரும் பாடமாக அமைகிறது.
கடவுளை மாட்சிமைப்படுத்துவதை நமது கீழ்ப்படிதல் வாயிலாக செய்ய முடியும்.கடவுள் மனிதர்களைப் படைத்தது தன்னை மாட்சிமைப்படுத்துவதற்காக. ஆனால், கீழ்ப்படியாமையால் மனிதன் தவறு செய்கிறான். கடவுளை புறந்தள்ளுகிறான். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு புகழ் சேர்க்கிறார்கள். எப்போது? தங்கள் பெற்றோருடைய வார்த்தைகளுக்கு பணிந்து நடக்கிறபோது. இயேசு சிலுவையை தோல்வி என்று கருதி ஒதுக்கிவிடவில்லை. மாறாக, கீழ்ப்படிதல் மூலமாக, வெற்றியாக மாற்றுகிறார். நமது வாழ்க்கையில் நாம் கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும். கடவுளின் வார்த்தைக்கு பணிந்து நடக்க வேண்டும்.
கடவுள் நிலையில் இருந்து நமக்கு வாழ்வு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய நமது பெற்றோருக்கு நாம் உண்மையுள்ளவர்களாக, கீழ்ப்படிதல் உள்ளவர்களாக விளங்க வேண்டும். நமது வாழ்வில் அக்கறைகொண்டு, நம்மை நேர்வழியில் நடத்த முனையும் பெரியவர்களுக்கும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்