சிறியவர்கள் சிறந்தவர்களே! சிறப்பாக்குவோமே!
லூக்கா 13:18-21
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
சிறியவர்களை நாம் ஒருபோதும் மட்டம் தட்டக்கூடாது. மிகவும் அன்பாக நடத்த வேண்டும். அவர்களின் ஆற்றலைக் கண்டு பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் முகம்மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியமானது. எடுத்துக்காட்டாக உலகத்திலேயே முதல் என்ஜினியர் தூக்கணாங்குருவி தான். தூக்கணங்குருவி உருவத்தில் சிறியது அதன் சிறப்பம்சம் மிகவும் பெரியது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் முதலில் வருகின்ற கடுகு உருவத்தில் சிறியது ஆனால் அதன் ஆற்றல் அகன்றது. இரண்டாவது வருகின்ற சிறிதளவு புளிப்பு மாவின் மறைந்திருந்து வெளிப்படுத்தும் ஆற்றல் அபாரமானது. ஆகவே சிறியவர்களை சிறப்பாக்க இந்த நாள் வழிபாடு நமக்கு உதவி செய்ய வந்திருக்கிறது. மிகவும் ஆர்வமுடன் இரண்டு செயல்களை செய்வோம்.
1. அருகிலிருங்கள்
நவீன உலகில் பெற்றோர்கள் சிறியவர்களை விட்டு தூரத்தில் உள்ளனர். பல பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியாது. பிள்ளைகளின் திருமுழுக்கு தேதி தெரியாது. உடல்நிலை, கல்வித்தரம் இவற்றையெல்லாம் அறிவதில் பெற்றோர் இன்றையக் காலக்கட்டத்தில் அக்கறை கொள்வதில்லை. உறவு என்பது உயிரோட்டமாக இல்லை. அவர்களுக்குள் நட்பு விரிந்து வளர்வதில்லை. ஆகவே சிறியவர்களின் சிறப்புநிலையை அடைவதில் தொய்வு விழுகிறது.
2. தூரத்திலிருங்கள்
அவர்களிடம் கோப்படுவதில் தூரமாயிருங்கள். உங்கள் ஆசைகளை தூரமாக வையுங்கள். தூரமாக இருந்து அவர்களை கவனியுங்கள். வளர்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து தூரமாக இருந்து கவனியுங்கள். அவர்களுக்காக உங்கள் தவறான பண்புகளை எல்லாம் தூரமாக வைத்துவிட்டு நல்ல எடுத்துக்காட்டை அவர்களுக்கு வழங்குங்கள்.
மனதில் கேட்க…
1. பல சிறியவர்களை நான் வளர்த்துவிடலாம் அல்லவா?
2. பெற்றோராகிய நாங்கள் சிறியவர்களாகிய எங்கள் குழ்ந்தைகளுக்கு சிறப்பான வருங்காலத்தை காண்பிக்க வேண்டுமல்லவா?
மனதில் பதிக்க…
தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள் (எபே 6:4)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா