சிறந்த வாழ்வு
நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று அறிய விரும்புவது இயற்கை. மற்றவர்களுக்கு நான் எப்படி தெரிகிறேன்? என்று நாம் அனைவருமே தெரிய விரும்புகிறோம். இயேசு கடவுளின் மகனாக இருந்தபோதிலும், தன்னைப்பற்றி மற்றவர்கள் நினைப்பதை அறிய விரும்புகிறார். இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவர் முழுமையாக மனிதராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாகவும் இதனை எடுக்கலாம். எது எப்படி இருந்தாலும், இயேசு தனது வாழ்வை செம்மைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை கருதியிருக்கலாம் என்பது ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.
இயேசு தன்னை மற்றவர்கள் யார் என நினைக்கிறார்கள்? என்று கேட்பதன் வாயிலாக தன்னை பெருமைபாராட்ட வேண்டும் என்று விரும்பவில்லை. அப்படி விரும்பியிருந்தால், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி அவர் வெகு எளிதாக தனது பெருமையை நிலைநாட்டியிருக்கலாம். மாறாக, தனது பாதையை, தான் வாழக்கூடிய வாழ்வை செம்மைப்படுத்த இந்த கேள்வியைக் கேட்கிறார். இது இயேசுவின் தாழ்ச்சியையும், சரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆவலையும் குறிக்கிறது. நம்மில் பலருக்கு, நாம் சரியாக வாழ வேண்டும், என்கிற ஆசையே இல்லாமல் போய்விடுகிறது. இந்த உலகத்தோடு வாழ வேண்டும். இந்த உலகம் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதை வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், சரியான வாழ்வு எது? என்பதை அறிந்து, அதற்கேற்ப நமது வாழ்வை வாழ்வதற்கு முன்வருவோம்.
இயேசுவின் இந்த நிலைப்பாடு நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன்னுதாரணம். எப்போதுமே நாம் வாழக்கூடிய வாழ்வு சரியான வாழ்வு தான், என்று சமாதானம் செய்து கொள்ளக்கூடாது. மாறாக, அவ்வப்போது நம்மையே சுயஆய்வு செய்து பார்த்துக்கொண்டு, மற்றவர்களிடம் சிறந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நாம் சரியான வாழ்வை வாழ்வதற்கான சிறந்த அளவுகோலாக இருக்க முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்