சாம்பல் புதன்
ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது. இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.
தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறுத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. மனமாற்றம் தான், இந்த தவக்காலம் நமக்கு விடுக்கக்கூடிய அழைப்பு. நமது வாழ்வை மாற்றுவதற்காக இந்த நாட்களிலே சிந்திப்போம். நாம் செயல்படுத்த வேண்டிய, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை யோசிப்போம். அதனை செயல்படுத்துவோம்.
ஒவ்வொரு தவக்காலமும் வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இருக்கக்கூடிய நிலைமை மாற வேண்டும். தவக்காலங்களில் மட்டும் கடின நோன்பு இருப்பதும், ஒறுத்தல் முயற்சி செய்வதும், தவக்காலம் முடிந்ததும், பழைய வாழ்வே கதி என்று கிடக்கக்கூடிய காலம் மாற வேண்டும். அந்த மாற்றத்திற்காக, நாம் பாடுபடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்