சரியானவரை சரியாக கண்டுபிடி!
லூக்கா 18:35-43
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் நம்முடைய வாழ்வின் பயணத்தில் பலவற்றை கண்டுபிடிக்கிறோம். புத்தகங்கள் வாசித்து அறிவை அங்கே கண்டுபிடிக்கிறோம். நண்பர்களோடு பழகி, உறவாடி நட்பை கண்டுபிடிக்கிறோம். அறிவை பயன்படுத்தி பலவிதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகளில் எல்லாம் மேலானதும் மிகவும் உயர்வானதும் எது தெரியுமா? இயேசுவை கண்டுபிடிப்பது தான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்ற பார்வையற்றவர் அதை சரியாகச் செய்தார். பார்வையில்லாமலிருந்தும் சரியான நபரை கண்டுபிடித்தார். பார்வையற்றவர் வாழ்க்கை நமக்கு இரண்டு விதத்தில் பாடமாக அமைகிறது.
1. எண்ணமெல்லாம் இயேசு
பார்வையற்றவருக்கு எண்ணம் முழுவதும் இயேசுதான். இயேசு என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்ததால் சரியாக அவர் கடந்து போவதை கண்டுபிடித்தார். இயேசுவைக் காண்பதற்கு அவருக்கு பார்வை ஒரு தடையாக இல்லை. நம்முடையை எண்ணத்தில் உறைந்திருப்பது யார்? எப்படிப்பட்ட சிந்தனைகள்? நம் எண்ணத்தை எல்லாம் வல்ல இயேசு இருக்கும் எண்ணமாக மாற்றுவோம்.
2. எனக்கெல்லாம் இயேசு
பார்வையற்றவர் எனக்கு இயேசு மட்டும் போதும் என்று எண்ணினார். இவ்வுலகில் இயேசுவை விட உயர்ந்த செல்வம் இல்லை என்பதை மிக தெளிவாக அறிந்திருந்தார். ஆகவே இயேசுவே தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என கத்தி இயேசு எவ்வளவு வல்லமை வாய்ந்தவர் என்பதை அறிவிக்கிறார். நமக்கு எல்லாம் யார்? நண்பர்களா? பொருளா? செல்வமா? ஊடகமா?
மனதில் கேட்க…
3. நான் கண்டுபிடித்திருப்பது யாரை? சரியான நபரையா?
4. எனக்கெல்லாம் யார்? நண்பர்களா? பொருளா? செல்வமா? ஊடகமா?
மனதில் பதிக்க…
நான் ஆண்டவரிடம், நீரே என் தலைவர், உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை என்று சொன்னேன்(திபா 16:2)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா