சந்திப்போமா தினமும் சந்திப்போமா
லூக்கா 9:18-22
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கிறிஸ்தவர்கள் பலர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலும் கிறிஸ்துவை சந்திக்காமலே சாவை சந்திக்கின்றனர். இயேசுவை காணாமலேயே கடந்து போகின்றனர். அதோடு அவர்களுடைய சகாப்தம் முடிவடைகிறது. சீடர்கள் மூன்று ஆண்டுகள் இயேசுவோடு இருந்தாலும் இயேசுவை மெசியா எனக் கண்டுக்கொண்டது பேதுரு மட்டுமே. அவர் மெசியாவைக் கண்டதால் மெசியாவே அவரை மெச்சினார். பேதுரு தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவு செய்தார்.
நம்முடைய பிறப்பு எப்போது முழு மகிழ்ச்சியைக் காண்கிறது? நாம் கடவுளை சந்திக்கும்போதுதான். அவரை இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் உயர்வாக பார்த்து அவரை அடைவதில் கருத்தாய் இருக்கும்போதுதான. இயேசுவை சந்திக்க வழிகள் இருக்கிறதா? ஆம் இரண்டு வழிகள் உள்ளன.
1. தினமும் திருப்பலி
தினமும் திருப்பலியில் பங்கெடுக்கும்போது இயேசுவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த சந்திப்பு அவரை அனைத்திலும் பெரிதாக உயர்வாக பார்க்க உதவுகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது.
2. தினமும் திருவிவிலியம்
தினமும் திருவிவிலியம் வாசிக்கும்போது நம் செவிகள் இயேசுவின் பக்கமாக திரும்புகிறது. நாம் அங்கே அவரை சந்திக்கிறோம். சங்கமமாகிறோம்.
மனதில் கேட்க…
1. பேதுரு போல பெயர் பெற்ற சீடனாக வாழந்துக் காட்டலாமா?
2. தினமும் திருவிவிலியம் வாசித்து திருப்பலியில் இயேசுவை சந்திக்கிற பழக்கம் எனக்கு உள்ளதா?
மனதில் பதிக்க…
பேதுரு மறுமொழியாக “நீர் கடவுளின் மெசியா” என்றுரைத்தார் (லூக் 9:20)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா