சகோதர அன்பு
நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார்,என்று பாருங்கள். 1 யோவான் 3:1.
ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை.அவருடைய சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய் அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார்.
உடல் ஒன்றே: உறுப்புகள் பல,உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம்.1 கொரிந்தியர் 12:12; 13.
நீங்கள் யூதரா?கிரேக்கரா? செல்வந்தரா?அடிமையா?நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன் கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை, கலாத்தியர் 5:20. இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம்.ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்மை, நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும்.கலாத்தியர் 5:22 .நாமும் அவருடைய
உறுப்பாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லையே!
ஒருவர் மற்றவர்களுடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுவோம். அவர்களோடு ஒப்பிட்டு பெருமை பாராட்டாமல் இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையை அவர் தோல்மீது சுமந்ததுபோல் நாமும் நம் சுமையை மாத்திரம் அல்லாமல் பிறரது சுமைகளையும் சேர்த்து சுமக்க கற்றுக்கொள்ளுவோம்.
உன்மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக,என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோம்.கலாத்தியர் 5:14.
இதை வாசிக்கும் அன்பானவர்களே!! நீங்கள் யாவரும் இயேசு கிறிஸ்துவின் உடலாயும், தனித்தனி உறுப்பாயும் இருக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 12:27.
அன்பானவர்களே நீங்கள் யாவரும் யாரைப்பற்றியும், குறை சொல்லாமல், குற்றம் கண்டுபிடிக்காமல் அவரவர் கடவுளின் உறுப்பாய் இருந்து செயல்படுவோம். நீங்கள் ஆண்டவரின்
கண்ணாய் இருந்தால் உங்கள் வேலை காண்பதுமட்டுமே. நீங்கள் காலாக இருந்தால் உங்கள் வேலை நடப்பதுமட்டுமே. ஒவ்வொரு உறுப்பும் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் ஆண்டவரின் கரத்தில் மணிமகுடமாய் இருக்க முடியும். அப்பொழுதுதான் நாம் சகோதர, சகோதரிகளாய் ஆண்டவரின் அன்பை நிலைநாட்டி அவருடைய உறுப்பாய் இருப்போம்.
ஜெபம்
எங்கள் அன்பின் ஆண்டவரே! இந்த நாளில் சகோதர அன்பை எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததற்காய் உமக்கு நன்றி தகப்பனே. நாங்கள் யாவரும் வசனத்தை படிக்கிறவர்களாய் மாத்திரம் இல்லாமல் இதை எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து செயல்படுத்த உதவி செய்யும், எங்கள் நல்ல தகப்பனே! உம்மையே புகழ்கிறோம், போற்றுகிறோம், ஆராதிக்கிறோம். ஆமென்,
அல்லேலூயா !!!.