கோதுமை மணியின் மாட்சி …
தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார்.
கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து “கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1: 22-24).
அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்” என்றார் இயேசு.
இந்த போதனையைக் கேட்டு அந்தக் கிரேக்கர்கள் மலைத்திருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள்கூட வியந்திருப்பர். அவர்களின் வியப்பை அதிகரிக்கும் வகையில் “மாட்சிப்படுத்தினேன், மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று தந்தையின் குரல் வானிலிருந்து ஒலித்தது. கோதுமை மணிபோல மடிந்தாலும், இறுதியில் இறைத்தந்தையால் இயேசு மாட்சிப்படுத்தப்படுவார் என்னும் உண்மையை அப்போது அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு என்னும் அனுபவங்களிலிருந்து சீடர்கள் கோதுமை மணியின் மாட்சியை உணர்ந்துகொண்டனர்,
நாமும் இந்த ஞானத்தைக் கற்றுக்கொள்வோம்.
மன்றாடுவோம்: கோதுமை மணிபோல மண்ணில் மடிந்த ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மடிந்த உம்மை உயிர்த்தெழச் செய்து மாட்சிப்படுத்திய தந்தை இறைவன், பிறருக்காகத் தம் உயிரைக் கையளிக்கும் அனைவரையும் மாட்சிப்படுத்துவதற்காக நன்றி செலுத்துகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
– பணி குமார்ராஜா