கொடுப்பதை இறையாசீராக எண்ணுவோம்
யூதர்களுக்கு என்று ஒரே ஒரு ஆலயம் தான். அதுதான் யெருசலேம் தேவாலயம். மற்றநாட்களில் செபிப்பதற்கும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும் அவர்கள் செபக்கூடங்களைப் பயன்படுத்தினர். யெருசலேம் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது. ஏனெனில், ஒவ்வொருநாளும் காலையிலும், மாலையிலும் இளம்செம்மறி ஆடு பலியிடப்பட வேண்டும். பலிப்பொருளுக்கு ஏராளமான மாவும், எண்ணெயும் தேவைப்பட்டது. சாம்பிராணியும், குருக்களுக்கான ஆடம்பர உடைக்கும் செலவு அதிகமாக இருந்தது. இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். எனவேதான், விடுதலைப்பயணம் 30: 13 கூறுவது போல, 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒவ்வொருவரும், வருடத்திற்கு ஒருமுறை 2 திராக்மா, கோவில் வரியாக செலுத்த வேண்டும். இது இரண்டு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.
ஒவ்வொரு ஆண்டும், ஆதர் மாதத்தில்(நமக்கு மார்ச் மாதம்), பாலஸ்தீன நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், கோவில் கட்டுவதற்கென நினைவூட்டும் அறிவிப்பு சொல்லப்படும். 15 வது நாளில் கோவில் வரி கட்டுவதற்கென ஒவ்வொரு ஊரிலும் அலுவலகங்கள் திறக்கப்படும். 25 ம் தேதிக்குள் கட்டாதவர்கள், யெருசலேம் ஆலயத்திற்கு சென்று நேரடியாகக்கட்ட வேண்டும். இந்த வரியைத்தான் இயேசுவிடத்திலே கேட்கிறார்கள். இயேசுவும் கொடுக்கச்சொல்கிறார். காரணம் கடவுளுக்காகக் கொடுப்பது என்பது எப்போதுமே மிகப்பெரிய ஆசீர்வாதம். நாம் சிறப்பாக கடவுளுக்கு ஒன்றும் கொடுத்துவிட முடியாது. ஏனெனில், நம்மிடம் இருக்கிற அனைத்துமே கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதுதான். ஆனாலும், கடவுள் கொடுத்தவற்றை, நல்லமுறையில் பயன்படுத்தி, அதை நாம் கடவுளுக்கு திருப்பக்கொடுக்க முடியும்.
கடவுள் கொடுத்த வாழ்வு என்னும் கொடையை, திறமைகளை, உறவுகளை நல்லமுறையில் பயன்படுத்துகிறேனா? அதைப்பயன்படுத்தி என் வாழ்வுக்கு பெருமை சேர்க்கிறேனா? கடவுளுக்கு அதை உகந்த முறையில் காணிக்கையாக்குகிறேனா? சிந்திப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

