கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்.லூக்கா 11 : 9.
இயேசுகிறிஸ்து தெய்வ மகனாய் இந்த உலகத்தில் வந்து அவரின் சாயலாய் படைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரும் மேலும் அன்புக்கூர்ந்து நமது தேவைகளைச் சந்தித்து நம்மை அளவில்லாமல் ஆசீர்வதித்து காத்து வருவதோடல்லாமல்,இந்த நாளிலும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து என் மகனே! என் மகளே! உனக்கு என்ன வேண்டும் கேளுங்கள் அப்பொழுது அவைகளை உங்களுக்கு கொடுக்க ஆவலாய் இருக்கிறேன் என்று சொல்கிறார்.
கேட்கிற யாவருக்கும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார். அது எப்பேற்பட்ட காரியமானாலும் அவருக்கு இலேசான காரியம். அவரின் சித்தப்படி கேட்டால் இன்னும் கூடுதலான ஆசீர்வாதத்தை நாம் பெற்ற்றுக்கொள்வது உறுதியான விஷயம்.அதில் அதிகப்படியான ஆசீரை காணலாம்.என் வாழ்க்கையில் இதை கண்டிருக்கிறேன். என்னைத்தேடி வந்து மீட்டு இதுவரை அவரின் கண்ணின் மணியைப்போல் காத்து வழிநடத்தி வருகிறார்.
நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய 20 வது வயதில் தான் இயேசு ஒரு கடவுள் என்று தெரியும். மற்ற கடவுளைப் போல் அவரும் ஒரு கடவுள் என்று நினைத்தேன். அதனால் நான் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். அவரின் வார்த்தையாகிய வேதத்தை வாசிக்கவில்லை. எனக்கு எடுத்துச்சொல்ல யாரும் இல்லை. என்னுடைய 33வது வயதில் என் வாழ்க்கையில் ஒரு சோதனையை கொடுத்து அதன் மூலம் நான் மறுபடியும் ஆண்டவரை தேட எனக்கு கிருபை அளித்தார்.
எனக்கு திருமணமான சமயத்தில் என் கணவருக்கு வெறும் 600 ரூபாய் சம்பளம். இதை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும். மிகவும் கஷ்டமான சூழ்நிலை. என்னுடைய 33வது வயதில் இருந்து வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வேதத்தை வாசிக்க வாசிக்க, ஆண்டவரை அதிகமாக தேட ஆரம்பித்தேன். அதன்பிறகு என் தேவைகள் யாவையும் ஆண்டவர் மிகவும் அழகாக செய்து வருகிறார். எனக்காக எதுவும் கேட்கமாட்டேன். ஆனாலும் என் தேவைகளை அறிந்து எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து,ஆபிரகாமை ஆசீர்வதித்தது போல என்னையும் ஆசீர்வதித்து வருகிறார்.
அன்பானவர்களே! சோதனைகளை கண்டு துவண்டு போய்விடாதீர்கள்.அதன்மூலம் நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ளலாம். எந்த நிலையிலும் மன உறுதியோடு அவரையே அன்பு செய்து அவரையே நம்பி அவரையே பற்றிக்கொண்டால் நாம் எதுவும் கேட்காமலே நம் தேவைகள் யாவையும் நிறைவேற்றுவார். எனக்கு செய்த கடவுள் உங்களுக்கும் நிச்சயம் செய்வார். வேதத்தை வாசியுங்கள். அவரையே உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்களும் வாழ்வில் உயர்வது நிச்சயம்.அவர் ஒருவரையும் கைவிடவே மாட்டார்.கேட்டும் பெற்றுக்கொள்ளலாம். கேட்காமலே நமக்கு தருவார்.
ஜெபம்
அன்பின் தந்தையே! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், உம்மிடத்தில் வருபவர்களை நீர் ஒருபோதும் கைவிடவே மாட்டீர். எங்கள் தேவைகள் யாவையும் நீர் அறிந்து அதையெல்லாம் நாங்கள் கேட்பதற்கு முன்னே நீர் எங்களுக்கு அருளிச் செய்வீர். உம்மை நோக்கி பார்க்கும் ஒவ்வொருவரையும் உமது ஆசீவாதத்தால் நிரப்பும். நோய்களை குணமாக்கும்.கடன் பிரச்சனை யாவையும் எடுத்து போடும். உம்முடைய சந்தோசத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பி ஆசீர்வதுத்துக் காத்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!ஆமென்!! அல்லேலூயா!!!
(Written by – Mrs.Sara, MyGreatMaster.com)