கூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்
லூக்கா 9:1-6
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் பயணமாக ஒரு ஊருக்குச் செல்லும் போது பயணத்திற்கு தேவையான பொருட்கள், பணம், உணவு, அலைபேசி மற்றும் அவசியமானவைகள் அனைத்தும் இருக்கிறதா என நன்கு பரிசோதித்துப் பார்ப்போம். அது நல்லது தான். அதைவிட உயர்வாக நாம் போகும் இடத்திற்கு நல்ல குணத்தைக் கொண்டு போகிறோமா என்பதை பெரும்பாலும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. இன்று அதை சிந்தியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் என சொல்லிக்கொண்டே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மோடு வருகிறது. போகுமிடமெல்லாம் நல்ல குணத்தை கொண்டுச் செல்ல இரண்டு செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும்.
1. சிறந்தவைகளை வாசியுங்கள்
நல்ல புத்தங்களை வாசிக்க வேண்டும். நம்மை பண்படுத்தும், பதப்படுத்தும் நல்ல அருமையான புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. தேடுகிறவர் கண்டடைகிறார்கள். ஆகவே சிறந்தவைகள் பற்றி வாசிப்பு நமக்கு நல்ல குணங்களைத் தரும்.
2. சிறந்தவர்களை நேசியுங்கள்
நல்ல மனிதர்களோடு பழக வேண்டும். நல்லவர்கள் நல்லதையே நம்முள் விதைக்கிறார்கள். நம்முடைய இனிமையான பேச்சு, ஆழமான அழகிய சிந்தனைகள், பிறர் நல்வாழ்விற்கான நம் முயற்சிகள் அனைத்தும் நாம் சிறந்தவர்களோடு பழகுகிறோம் என்பதை பிறருக்கு எடுத்துக்காட்டும்.
மனதில் கேட்க…
1. என் கூடவே நான் கொண்டு போவது என் தீய குணத்தையா அல்லது நல்ல குணத்தையா?
2. சிறந்தவர்களை நேசிப்பவர்களையே மற்றவர்கள் நேசிப்பார்கள் – நான் யார்?
மனதில் பதிக்க…
இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?(மீக் 6:8)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா