குவித்து வைப்பது பாவம்
லூக்கா 21:1-4
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகவும் பாராட்டுகிறார். ஏன்? அவர் தனக்கு பற்றாக்குறை இருந்தும் அனைத்தையும் போட்டார். அடுத்து என்ன செய்வது என்பது தெரியாதிருந்தும் காணிக்கையளித்தார். மற்றவர்கள் தங்களுக்கென்று நிறைய சேமித்து வைத்து மிகவும் கொஞ்சமாக காணிக்கை போட்டனர். ஆனால் இவரோ தனக்கென்று எதையும் சேமிக்காமல் இருந்த அனைத்தையும் போட்டுவிட்டார். ஆகவே இயேசுவின் சிறப்பு ஆசீரைப் பெறுகின்றார்.
அன்புமிக்கவர்களே! நாம் நமக்கென்று குவித்து சேர்த்து வைப்பது பாவம். நமக்கு தேவையானது, நமக்கு குடும்பத்திற்கு தேவையானது போக மீதமிருப்பதை கடவுளுக்கு கொடுக்க வேண்டும், மற்றவரோடு பகிர வேண்டும். இரண்டு வழிகளில் அதை செய்யலாம்.
1. கடவுளுக்காக உதவி
கடவுளின் பணியை உதவிகள் இல்லாமல் செய்ய முடியாது. நற்செய்தி பணிக்கும் உதவிகள் தேவைப்படுகிறது. மாதம் தோறும் இந்த பணிகளுக்காக உதவிகள் செய்ய வேண்டியது நம் கடமை. கடவுள் கொடுத்தவர் அவருக்கு மனம்குளிர கொடுக்க வேண்டும். பணத்தை அதிகமாக குவித்து நம் சுயநல்திற்காக வைப்பது தவறு. கடவுள் நம்மை நோக்கி கேட்கிறார். கொடுப்போம் தாராளமாக.. ஏராளமாக..
2. கல்விக்காக உதவி
நம் பங்கில், அன்பியத்திலுள்ள ஏழை மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். நம் பிள்ளைகள் படிக்கிறார்கள் அதுபோன்று அவர்களும் உயரே வர வேண்டும் என்ற உயர்வான எண்ணம் நம் குடும்பத்தை உயர்த்தும். ஏழை மாணவர்களை ஏங்க வைக்காதீர்கள். ஏற்றம் காண உதவுங்கள். கடவுள் நம்மை நோக்கி உதவ சொல்கிறார். கொடுப்போம் தாராளமாக.. ஏராளமாக..
மனதில் கேட்க…
1. நான் இதுவரை கடவுள் பணிக்காக செய்தது என்ன? கை நீளுகிறதா?
2. கடவுள் கொடுத்த பணம் என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அடுத்த ஏழைப் பிள்ளைகளுக்கும் சேர்த்து தானே?
மனதில் பதிக்க…
நல்லதை செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேருங்கள். தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளியுங்கள் (1திமொ 6:18)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா