குழந்தை வளர்ப்பு !
இல்லத்தில் குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்னும் பாடத்தை இன்றைய நற்செய்தி வாசகம் (+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40) நமக்குக் கற்றுத் தருகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற குழந்தை ”வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது” என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது. குழந்தை வளர்ப்பின் மூன்று அம்சங்களை இந்த வாக்கியம் எடுத்துரைக்கிறது:
1. வலிமை: குழந்தைகள் உடலிலும், உள்ளத்திலும், ஆன்மாவிலும் வளர்ந்து, வலிமை பெற வேண்டும். பொதுவாக, பெற்றோர்கள் குழந்தையின் உடல் வலிமைக்குத் தரும் முதன்மை உள்ள மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், வலிமைக்கும் தருவதில்லை. அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
2. ஞானம்: குழந்தை வளர்பின் இரண்டாம் அம்சமாக ஞானம் இடம் பெறுகிறது. இறையச்சமே ஞானத்தின் தொடக்கம் என்று இறைமொழி உரைக்கிறது. எனவே, குழந்தைகளை இறைப்பற்றில் பெற்றோர் வளர்க்க வேண்டும்.
3. குழந்தைகள் கடவுளுக்கும், பெற்றோருக்கும், சமூகத்துக்கும் உகந்தவர்களாக வளர வேண்டும். ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு குழந்தையும் சமூகப் பற்றோடு, இந்த உலகம் உய்வதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்னும் மனநிலையில் வளர்க்கப்பட வேண்டும்.
மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, எங்கள் குழந்தைகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகளை உம் பாதத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். இந்தக் குழந்தைகளை ஆசிர்வதித்து, அவர்கள் ஞானம் நிறைந்தவர்களாக, உடல், உள்ள, ஆன்ம வலிமை நிறைந்தவர்களாக, உமக்கு உகந்தவர்களாக வளர அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா