குறைவான மன்னிப்பு, குறைவான அன்பு !
பாவியான பெண்ணை இயேசு மன்னித்து, அவருக்கு ஆதரவாகப் பேசும் பகுதியை இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-8: 3) வாசிக்கக் கேட்கிறோம். இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் என்னும் இயேசுவின் நிறைவான சொற்கள் அன்புக்கும், பாவ மன்னிப்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன. அன்பு திரளான பாவங்களைப் போக்குகிறது என்னும் பேதுருவின் மொழிகள் இங்கு நினைவுகூரத்தக்கவை. நமது பாவங்கள் அதிகமாக இருந்தால், நமது அன்புச் செயல்களை அதைவிட அதிகமாக்கிக் கொள்வதுதான் மன்னிப்புப் பெறுவதற்கான வழி.
குறைகளோ, குற்றங்களோ இல்லாத மனிதர் நம்மில் எவருமே இலர். எல்லாருமே பாவிகள்தாம். எனவே, பாவங்களிலிருந்து விடுதலை பெறவும், மன்னிப்பு அடையவும் இயேசு சுட்டிக்காட்டும் வழி அன்புதான். இறைவனை, நம் அயலாரை, நமக்குத் துன்பம் செய்வோரை நாம் அன்பு செய்ய முன் வந்தால், நமது பாவங்களை இறைவன் நிச்சயமாக மன்னிப்பார். இந்த ஆறுதல் தரும் வார்த்தைகளுக்காக இயேசுவுக்கு நன்றி சொல்வோமா?
மன்றாடுவோம்: பாவங்களை மன்னிப்பதில் வள்ளலான இயேசுவே, இன்றைய நற்செய்திக்காக உமக்கு நன்றி. மிகுதியாக அன்பு செய்பவரின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்படும் என்று மொழிந்த உம்;மைப் போற்றுகிறோம். எங்களுடைய பாவங்களின் அழுத்தத்திலிருந்து விடுதலை பெற அன்பை ஆயதமாக அணிந்துகொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா