குறைசொல்வதைத் தவிர்ப்போம்
மார்த்தாவுக்கும், மரியாவுக்கும் என்ன வேறுபாடு? இதுதான் இன்றைய நற்செய்தியை (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42) வாசித்தவுடன் நமக்கு ஏற்படக்கூடிய உணர்வு. இரண்டு பேருமே நல்ல பண்புகளைக் கொண்டிருந்தனர். இரண்டு பேருமே அவரவர் தேவைக்கேற்றவாறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இரண்டு பேருமே எண்ணத்திலும் சரி, சிந்தனையிலும் சரி, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ”உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்வேன்” என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் நண்ராக இலாசர் இருக்கிறார் என்றால், உண்மையில் அவரது பண்புநலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படியென்றால், எந்த ஒரு பண்பு மரியாவையும், மார்த்தாவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது?
மரியா, மார்த்தாவிற்கு இடையேயான வேறுபடுத்திக் காட்டக்கூடிய பண்பு, மார்த்தாவிடத்தில் காணப்படக்கூடிய அடுத்தவரிடத்தில் குறை காணக்கூடிய பண்பு. மார்த்தா இயேசுவைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக, பரபரப்பாகி வேலை செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையில் கருத்தூன்றி இருந்திருந்தால், இந்த பிரச்சனை இல்லை. ஆனால், அவர் மரியாவின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார். மரியாவின் மட்டில், தேவையில்லாத அக்கறை இது. தன் கடமையை மட்டும் செய்து கொண்டிருக்காமல், அடுத்தவரைப்பற்றி தேவையில்லாமல் எண்ணுவதும், குறைசொல்வதும் நாம் தவிர்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே, இயேசுவின் வார்த்தைகள் நமக்குக்காட்டுகிறது.
மார்த்தாவைப்போலத்தான் நம்மில் பலபேர் வெகு சிறப்பாக பொதுவேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வார்கள். ஆனால், அவர்களிடத்தில் காணப்படக்கூடிய தேவையில்லாத பண்பு, அடுத்தவரைப்பற்றி தவறாக எண்ணுவதும், தேவையில்லாமல் குறைகூறுவதும். இதனை நாம் தவிர்க்க வேண்டும். நமது பணியைச் செய்வதில் நாம் நிறைவு காண வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்