குருவுக்கே சிலுவை, சீடனுக்கு செங்கோலா?
மாற்கு 9 : 2- 13.
சீடர்களின் ‘மெசியா என்றால் யார்? என்ற புரியாத குழப்பத்திற்கு மத்தியிலும் மானிடமகனின் மரணத்தைப் பற்றி கேட்டு சோர்ந்து போன சீடர்களுக்கு ஒரு தெளிவையும், உற்சாகத்தையும் கொடுப்பதே இன்றைய நற்செய்தி. தன்னை தன் சீடர்களைப் புரிந்து கொள்ளாத நிலையில் குறைந்தப்பட்சம் தன் நெருங்கிய சீடர்களாவது புரிந்து கொள்ளட்டும் என்று அவர்களை மட்டும் அழைத்துச் சென்று இந்த உருமாற்றத்தை ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார்.
தொல்லைகளாய் துவண்டு, அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு, என்ன செய்;ய வேண்டுமென்றே தெரியாத சூழ்நிலையில் எல்லாம், நமக்கு ஒரு குரல் கேட்கவேண்டும். ‘இவரே என் அன்பார்ந்த மகன்” இவருக்குச் செவிசாய்ப்பாயாக” இந்த குரலின் முழு வடிவம் தான் நமது திருவிவிலியம். நமது திருவிவிலியத்தின்படி நடந்தால் நாமும் சீடர்களைப் போன்று இயேசுவின் மாட்சிமைப் பொருந்திய நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியும். அவருடைய வார்த்தைகளை வாழ்வாக்க முடியும்.
இந்த உருமாற்றம் இன்னொரு முக்கியமான பாடத்தை நமக்கு தருகின்றது. இயேசு தம் சிலுவை மரணத்தை மீண்டுமாய் உறுதிப்படுத்துகிறார். மேலும் நாம் எத்தனை முறை அதிசயங்களையும், அற்புதங்களையும், மாட்சிமையான காரியங்களையும் நம் வாழ்வில் கண்டாலும், அனுபவித்தாலும் சிலுவையை சுமந்த இயேசுவைக் கொல்லாமல், என் வாழ்வில் வரும் துன்பத்தைக் கண்டு பயந்து ஓடினால் நமக்கு மீட்பில்லை. அவருடைய முழுமையான நிலையான மாட்சியில் பங்கில்லை. சிலுவைகள் வேண்டாம் என வேண்டாமல் சிலுவையைத் தூக்கி சுமந்து அவரைப் பின் செல்ல ஆற்றலைக் கேட்போம். பல அரசர்களின் வெற்றியைக் காட்டிலும், இயேசுவின் ஐந்து காயங்களின் அழுத்தமும் ஆழமும் அதிகம். இயேசுவுக்கு சிலுவையும் முள்முடியும் தான் அடையாளம் என்றால், அவரின் சீடர்கள் மணிமகுடத்தை எதிர்பார்க்கலாமா?
~ திருத்தொண்டர் வளன் அரசு