குருத்து ஞாயிறு
லூக் 22 :14- 23:56
சந்தித்து சாதிக்க, சிந்திக்க
குருத்து ஞாயிறு, ‘ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து அவற்றை மீட்பின் சக்தியாக மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏன் எருசலேம்?
இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார். இதுவரை என் காலம் இன்னும் வரவில்லை என்றவர் காலம் வந்துவிட்டதை மிகவும் நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் நுழைகிறார்.
ஏன் இன்று?
யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படம் நாள், ஆம் அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள் பாஸ்கா விழாவினைக் கொண்டாடுவார்கள்.( வி.ப 12:2) இதில் பலியிடுகின்ற ஆட்டினை நான்கு நாட்களுக்கு முன்பாக தேர்ந்தெடுப்பார்கள் (லேவி 23) அதாவது குருத்து ஞாயிறான இன்று தான் மாசற்ற ஆட்டுக்குட்டியினை தேர்ந்தெடுத்து புனித வெள்ளியன்று பலியிடுவர். இயேசுவும் தன்னையே பலியிடப்படுகின்ற செம்மறியாக இந்நாளில் கையளிக்கின்றார்.
ஏன் கழுதை:-
இறைவாக்கினர் செக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிற வகையில் கழுதையின் மீது அமர்ந்து வருகிறார். கழுதை தாழ்ச்சியின் அடையாளம், ஒதுக்கப்பட்டவர்களின் சின்னம், அடிமையின் விலங்கு, அமைதியின் சிகரம், பொதுவாக வெற்றிப் பெற்றவர்கள் தன்னை அரசனாகக் காண்பித்துக் கொண்டவர்கள் குதிரையின்மீது தான் பவனி வருவார்கள் ஆனால் இயேசு அனைத்தையும் தலைகீழாக்கியவர். பிலாத்து உள்ளிட்ட உரோமையர்களுக்கு இது ஒரு வேடிக்கை வினோதமாக, சுட்டி டிவியைப் பார்ப்பது போலவே தோன்றியது எள்ளி நகையாடிவிட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார்கள்.
ஏன் ஓசன்னா?:-
இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டோர் பலரும் இருந்தனர். இதனைக்கண்டு பரிசேயர்களும் தலைமைக்குருக்களும் பொறாமைப்பட்டதை இரண்டு நாட்களுக்கு முன்பாக நற்செய்தியில் நாம் வாசிக்கக் கேட்டோம். அவரைப் பின் தொடர்ந்த மக்கட்கூட்டம் அவருடைய இறைப்பண்பை உணர்ந்தார்களாக எனத் தெரியவில்லை. மாறாக அவரே ஓர் அரசராக ஏற்றுக் கொண்டதை அவர்களின் செயல்கள் காண்பிக்கின்றன. வழிகளில் தங்கள் மேலுடைகளை விரித்து அரசருக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர். ஒலிவமரம் என்றாலே வெற்றியின் அடையாளம். அதன் கிளைகளைத் தறித்து வெற்றிக்கீதம் பாடுகின்றனர். இதோ எம் அரசர் எருசலேமுக்குள் நுழைந்து விட்டார் என்று புகழ்கிறார். ஓசான்னா! ஓசான்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். இதை அனைத்தையும் பார்க்கின்ற பரிசேயர்களால் ஜீரணிக்க முடியவி;ல்லை.
இயேசுவின் மனநிலை:-
இந்த வெற்றியின் ஆர்பரிப்பு, இன்னும் சில நாட்களில் புலம்பலாக மாறும் என்பதையும், இந்த ஓசான்னா, ஒழிக என்று மாறும் என்பதையும், இந்த மரஇலைகள், கிளைகள் அனைத்தும் இலை ஏதும் இல்லா முள்முடியாக மாறும் எனவும் அவர்களின் ஆடைவிரிப்பு அனைத்தும் அவரின் ஆடையையே கழற்றிவிடும் எனவும் கூட்டமாக பின் தொடர்ந்தவர்கள், பின்னால் ஒருவரும் நிற்கமாட்டார்கள் எனவும், மக்களின் மத்தியில் பவனி வந்தவர், இரு கள்வர்களின் நடுவில் அசைய முடியாமல் அறையப்பட்டு இருப்பார் எனவும் அவர் நன்றே அறிந்து வைத்திருந்தார். மரணத்தைக் கண்முன் கொண்டிருந்தாலும், தான் அடைய இருந்த இலக்கினை மிகத் தெளிவாக கடந்து வந்தார். போற்றலையும் தூற்றலையும் சமமாக எடுத்துக் கொண்டார். மனிதத்தின் எதிரி சாவினை வெற்றிக்கொள்ள சாவினை பற்றிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதில் தெளிவாக இருந்தார்.
இவையனைத்தையும் அவர் சந்தித்து சாதித்தது எப்படியென்றால் அவர் நன்கு அறிந்திருந்ததால்,
‘துன்பம் இல்லையென்றால் இன்பம் இல்லை!
சாவு இல்லையென்றால் வாழ்வு இல்லை!
சிலுவை இல்லையென்றால் உயிர்ப்பு இல்லை!
பெரிய வெள்ளி இல்லையென்றால் பாஸ்கா இல்லை!
நாமும் இந்த மனநிலையோடு நம் அன்றாட வாழ்வினை சந்திப்போம், சாதிப்போம் இப்பொழுது சில நிமிடம் சிந்திப்போம்.
~ திருத்தொண்டர் வளன் அரசு