கிறிஸ்து அரசர் பெருவிழா
இவரைப் போல வருமா?
யோவான் 18:33-37
இறையேசுவில் இனியவா்களே! கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கிறிஸ்து அரசர் பெருவிழா நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கிறிஸ்து அரசரின் ஆட்சி நடைபெறுவதாக!
கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிந்திருந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் காலனிய ஆதிக்கத்தின் வழியே, இன்னும் பல கோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. மன்னர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார். கிறிஸ்துவும் ஓர் அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும், மக்கள், குறிப்பாக, தலைவர்கள் கண்டு பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, அரசர்களாகிய நாம் பாடங்களை பயில முன்வர வேண்டும் என்பதே இன்றைய திருநாளின் நோக்கம். மூன்று பாடங்களை கிறிஸ்து அரசரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
1. எப்போதும் மக்களுக்காக வாழ்பவர்
முன்பொரு காலத்தில் பெர்சியா நாட்டை ஆண்ட ஷா என்ற மன்னர் மக்கள்மீது அதிகமான அக்கறையும், அன்பும் கொண்டவராக இருந்தார். எந்தளவுக்கு என்றால் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று, மக்களோடு பேசுவார். அப்போது அவர்கள் சொல்லக்கூடிய குறை, நிறைகளை எல்லாம் கருத்தில் எடுத்துகொண்டு, மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்துவந்தார். இதனால் மக்கள் அனைவரும் அவரது ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் அரசர் ஊரில் இருக்கக்கூடிய ‘பொதுக்குளியல் அறைகள்’ பகுதிக்குச் சென்றார். அங்கே மக்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வெதுவெதுப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக்கூடியவர்கள் அதில் மகிழ்ச்சியாகக் குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார்கள். இப்படி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக் குளிக்க, தண்ணீரைச் சூடாக்குகின்ற பணியை யார் செய்கிறார்? என்று பார்ப்பதற்காக மன்னர் ‘பொதுக்குளியல் அறைகள்’ இருக்கக்கூடிய பகுதியின் உட்புறத்திற்குச் சென்றார்.
அங்கே ஒரு தாழ்வான அறை இருந்தது. அதில் ஒரு பெரியவர் நாள் முழுவதும் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய அளவில் தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். சாதாரண மனிதர் உருவில் இருந்த அரசர், அம்மனிதரிடம் பேச்சுக் கொடுத்தார். அதற்கு அம்மனிதர், “நாள் முழுவதும் இந்த இருட்டு அறைக்குள் சூட்டையும், வெக்கையையும் தாங்கிக்கொண்டு வேலைப் பார்த்தாலும் மக்கள் மகிழ்ச்சியாகக் குளிக்கிறார்ளே என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். அதோடு நின்றுவிடாமல், அவர் தன்னிடம் இருந்த கொஞ்சம் உணவையும் சாதாரண உடையில் இருந்த அரசரோடு பகிர்ந்து உண்டார்.
இவற்றையெல்லாம் பார்த்து அரசருக்குச் சந்தோசம் தாங்கமுடியவில்லை. சிறிதுநேரம் அவர் அவரிடம் பேசிவிட்டு, இன்னொரு நாள் வருவதாக வாக்குறுதிக் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஒருசில நாட்களுக்குப் பிறகு அரசர் மீண்டுமாக அந்த மனிதர் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரிடம் பேசினார். அன்றைக்கு அரசர் அவரிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், நான் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் யார் என்பதை அவருக்கு வெளிப்படுத்தினார்.
அரசர் தான் தன்னைப் பார்க்க இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அந்த மனிதர், “அரசே! எனக்கு எதுவும் வேண்டாம். யாருமே வராத இந்தப் பகுதிக்கு வந்து, என்னைப் பார்த்துப் பேசினீர்களே, அந்த அன்பு ஒன்றே போதும்” என்றார். தான் அரசனாக இருந்தாலும், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, சாதாரண மனிதரைப் பார்க்க வந்த அந்த ஷா மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.
அரசர் மக்களுக்காக வாழ வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் மகிழ்சிக்காக அவர் இறங்கி வர வேண்டும். இரவும், பகலும் மக்களுக்கு சேவை செய்வதையே மிகவும் பெரிதாகக் கொள்ள வேண்டும். விண்ணிலிருந்த ஆண்டவர் இயேசு மணணகம் வந்து பாவிகளாகிய நம்மை தன்னுடைய நிபந்தனையற்ற நிரந்தரமான அன்பினால் அரவணைத்தார். நமக்காகவே மரித்தார். அன்பு என்பது இன்னதென்று சொல்லித்தந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது.
அரசர்களாக அரசிகளாக இருக்கின்ற நாம் நமக்காக வாழாமல் அருகிலிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு வாழும் போது வாழும் வாழ்க்கை இனிக்கிறது. நம் அருகிலிருப்பவர்கள் நலம்பெற நாம் கரம் கொடுப்போம். அதிகாரம் காட்டாமல் அன்பை வெளிப்படுத்தி அன்பின் மாந்தர்களாக வாழ்வோம். நம் அருகிலிப்பவர்களின் மனங்களில் குடிகொள்வோம். தரைமட்டும் தாழ்த்தி அடுத்தவருக்கு பணிசெய்வோம். சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசு தரும் பாடம் நமதாகட்டும். நம் அன்பின் ஆட்சியால் அகிலம் ஆரோக்கியமடையச் செய்வோம்.
2. எப்போதும் நல்லதையே பேசியவர்
1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், “The King of Kings”. இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B.De Mille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.
ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். “The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது” என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார்.
.
வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. குறிப்பாக நான் நம்பிக்கையுடன் உள்ளேன். எனக்கு இயேசு நம்பிக்கை அளித்துள்ளார். என் சாவை துணிவுடன் சந்திப்பேன். ஆண்டவரில் உயிர்த்தெழுவேன் என்றார் நம்பிக்கையுடன் அந்த பெண்.
கிறிஸ்து அரசர் எப்போதும் நல்ல வார்த்தைகளையே வழங்கியவர். அவர் சொன்ன வார்தைகள் இன்றும் பலருக்கு குணம் அளிக்கின்றது. நம்பிக்கை தருகின்றது. பலம் கொடுக்கின்றது. பாதை காட்டுகின்றது. புனித பயணத்தை அமைத்துக் கொடுக்கின்றது. மிகப்பெரிய தாக்கத்தை அவர்மீது தாகம் கொண்ட அனைவரிலும் ஏற்படுத்துகின்றது.
நாமும் கிறிஸ்து அரசரின் வழியில் அரசாட்சி செய்யவே இந்த நாள் அழைக்கின்றது. அதட்டி காரியத்தை செய்ய விரும்பாதீர்கள். பண்புடனே பாராட்டி காரியங்களை செய்யுங்கள். நல்ல வார்ததைகளை அனைவருக்கும் நல்லாசீராக வழங்குவோம். நன்மைகள் செய்து நம்முடன் இருப்பவரோடு நன்கு பழவோம். நம் வார்த்தைகள் பிறருக்கு மருந்தாக அமையட்டும். பிறரை மயக்கும் மந்திரசக்தியாக வல்லமையை பொழியட்டும்.
3. எப்போதும் நம்மோடு இருப்பவர்
ஒரு போர்த்துக்கீசிய நாவலில் வரக்கூடிய நிகழ்வு இது. ஜான் என்ற இளைஞன் கப்பலுக்கு வேலைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்செல்வம் திரட்டிக்கொண்டு, தன்னுடைய சொந்த ஊரான லிஸ்பனில் வந்து இறங்கினான். அப்போது அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. இப்படியே உறவினர்களது வீட்டிற்குச் செல்லாமல், கிழிந்த, அழுக்கான உடையில் செல்வோம். அப்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அதன்பிறகு அவர்களது வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்துகொண்டு, ஒரு கிழிந்த அழுக்கான சட்டையும், ட்ரவுசரையும் போட்டுக்கொண்டு தன்னுடைய நெருங்கிய உறவினரான பட்ரோவின் வீட்டிற்குச் சென்றான்.
அங்கே அவரிடம், “கப்பலில் விபத்து ஏற்பட்டு, என்னிடம் இருந்த பணமெல்லாம் போய்விட்டது, இப்போது இந்தநிலைக்கு ஆளாகிவிட்டேன். அதனால் ஒரு நல்ல வேலைக் கிடைக்கும்வரைக்கும் இங்கே தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அவருடைய உறவினரோ, “என்னுடைய வீட்டில் போதுமான இடமில்லை, அதனால் தயவுசெய்து வேறொரு இடத்தில் போய்த் தங்கிக்கொள்” என்று சொல்லி விரட்டிவிட்டார்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு, தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தான். ஆனால் எல்லாருமே ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி, அவனுக்கு இடம்தராமல் விரட்டிவிட்டார்கள். இறுதியாக அவன், இனிமேலும் இவர்களை நம்பி எந்த பயனும் இல்லை’ என்று தான் வைத்திருந்த பெரும் செல்வத்தை வைத்து ஒரு மிகப்பெரிய மாடமாளிகை கட்டினான், அவனுக்கென்று பணியாளர்களை வைத்துக்கொண்டான். இதனால் சில நாட்களிலேயே அவனுடைய செல்வச் செழிப்பைப் பற்றிய பேச்சு லிஸ்பன் நகர் முழுவதும் பரவியது.
இதைக் கேள்விப்பட்ட ஜானின் உறவினர்கள், நண்பர்கள் “இவையெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கலாமே” என்று வருத்தப்பட்டார்கள்.
மக்கள் நம்மிடம் பணம் இருந்தால் ஒருவிதமாக நடந்துகொள்வதும், பணம் இல்லையென்றால் வேறொரு விதமாக நடந்துகொள்வதும் நடக்கும் இக்காலத்தில் கிறிஸ்து அரசரின் பணியும், பாணியும் மிக வித்தியாசமாக நமக்கு தென்படுகிறது.
கிறிஸ்து அரசர் செல்வந்தராக இருந்தும், நமக்காக ஏழையானார். எல்லாம் நம்மீது வைத்த அன்புதான். கிறிஸ்து அரசர் எல்லா சூழ்நிலையிலும் நம்முடன் இருப்பவர். பலவீனத்தில் நம்மோடிருந்து தன்னுடைய முழுஉடனிருப்பையும் தருபவர். மிகவும் நெருக்கமாக நம்மோடிருப்பவர். குறைகளில் நம்மை விட்டுவிட்டு ஓடாதவர். கூடவே இருந்து குறைகளை நிறைவாக்கும் நல்அரசர் அவர்.
நாம் எப்போதும் மற்றவரோடு இருக்கும் நட்பை உருவாக்குவோம். பயன்படுத்திவிட்டு தூரே எறியும் கலாச்சாரத்தை காணாமல் ஆக்குவோம். எப்போதும் இருந்து ஆறுதல் அளிக்கும் ஆற்றுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய புறப்படுவோம். அடுத்தவரின் குறைகளில் அவரைத் தூக்கி எறியாமல் அவரின் துயர்துடைக்க ஏற்பாடு செய்வோம். நிறைகளை கண்டு மனிதரிடம் பழகாமல் குறைகளிலே நிறைவடையும் பண்பை வளர்ப்போம். யாரையும் விலக்காத, கைவிடாத அரசர்களாக, அரசிகளாக வலம் வருவோம். நம் ஆட்சி இன்றிலிருந்து இனிதே இனிப்பையும், இன்பத்தையும் அனைவருக்கும் வழங்கட்டும்.
மனதில் கேட்க…
1. நான் நடத்தும் ஆட்சி எனக்கு பிடித்திருக்கிறதா? என்னுடைய நிர்வாகம் சரியானதா?
2. இயேசுவைப் போல ஆட்சி நடத்தி பலரின் மனங்களில் வாசம் வீச நான் செய்யும் ஏற்பாடுகள் என்னென்ன?
மனதில் பதிக்க…
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். (லூக் 1:32-33)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா