கிறிஸ்துவே முழுமுதற்செல்வம்
”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். இன்றைய நற்செய்தியின் சாராம்சத்தைத்தான், பவுலடியார் நிச்சயம் தன் வாழ்வில் அனுபவித்து இதனைச் சொல்லியிருக்க வேண்டும். இயேசுவின் சீடராக இருக்க வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்குரிய தகுதிகளாக இயேசு கிறிஸ்து எதிர்பார்ப்பது என்ன? எப்படி நாம் இயேசுவின் சீடர்களாக மாற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதில் அனைத்தும், இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது.
கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக நாம் பெற வேண்டுமென்றால், நமது வாழ்வில் நாம் பலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். ஆனால், கிறிஸ்துவை நாம் பெறுகிறபோது, நமக்கு வேறு எதுவும் நிச்சயம் தேவையில்லை தான். ஏனென்றால், கிறிஸ்து தான் நமது வாழ்வின் இலக்காக இருக்கிறார். ஓட்டப்பந்த வீரன் ஒருவனுக்கு வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க முடியும். அதற்காக, அவன் எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறான். அந்த வெற்றி ஒன்று தான் வாழ்வின் இலக்காக இருக்கிறது. அதை அடைகிறபோது, மற்ற இழப்புகள், அவனைப்பொறுத்தவரையில் இழப்பாகவே தெரிவதில்லை. பவுலடியார் சட்டங்களையும், மறைநூலையும் கற்று தேர்ந்த மேதை. ஆனால், அவரே “கிறிஸ்துவின் பொருட்டு மற்ற அனைத்தையும், குப்பையென்று கருதுகிறேன்” என்று சொல்கிறார். அந்த மனநிலை நமக்கு வேண்டும் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
நமது வாழ்வில் நாம் கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எதனையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறோமா? கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்கிறோமா? நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்து மகிமைபெற வேண்டும் என்கிற அந்த இலக்கு என்னிடத்தில் இருக்கிறதா? என நம்மையே கேட்டுப் பார்ப்போம். கிறிஸ்துவை முழுமையாக ஏற்று, நிறைவோடு வாழ முயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்