கிறிஸ்துவுடனான வாழ்க்கை
1யோவான் 1: 5, 2: 2
நேர்மை என்பது நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே நிலவுகிற இணக்கம். இது எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவர் நேர்மையாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதைத்தான் யோவான், தன்னுடைய மடலில் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, இப்படிப்பட்ட நேர்மையான வாழ்க்கை வாழ்வது ஆகும். நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிக்கையிட்டால் மட்டும் போதாது, மாறாக, அவருடைய விழுமியங்களை நாம் வாழ்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
”நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நட்புறவு உண்டு என்போமென்றால், நாம் பொய்யராவோம்”. நம்முடைய வாழ்க்கை பல நேரங்களில் இப்படித்தான் அமைவதாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் வந்து விட்டோம் என்று சொல்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்க்கை அதனை வெளிப்படுத்தவில்லை. அதற்கு சான்றுபகரவும் இல்லை. நம்முடைய வாழ்க்கை அதற்கு சான்று பகராதபோது, நாம் எப்படி, கிறிஸ்துவுக்குள் வாழ்வதாகச் சொல்ல முடியும்? அது தவறானது மட்டுமல்ல, முற்றிலும் முரண்பட்ட ஒரு வாழ்க்கை ஆகும். அப்படிப்பட்ட வாழ்க்கை, கடவுளுக்கு எதிரான வாழ்க்கை.
நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நமக்கு போதாது. அதனை வாழ வேண்டும் என்பது நம்முடைய வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். அதற்காக முயற்சி எடுக்க வேண்டும். இறைவனின் துணையோடு, நம்மால் அந்த வாழ்க்கையை வாழ முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். அப்போது, நிச்சயம் நம்மால் அந்த வாழ்க்கையை வாழ முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்