கிறிஸ்துவில் கொண்டிருக்கிற பற்றுறுதி
1பேதுரு 5: 5 – 14
தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றில், ஆங்காங்கே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள், ஒரு குழுவாக வாழ ஆரம்பித்தனர். சிறு சிறு கிறிஸ்தவ குழுக்கள் தோன்றின. தொடக்கத்தில் அவர்களோடு சீடர்கள் தங்கி, அவர்களுக்கு இறைவார்த்தையை அறிவித்திருந்தாலும், மற்ற இடங்களுக்கும் நற்செய்தி அறிவிக்க செல்ல வேண்டும் என்பதால், அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றனர். அதேவேளையில், அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியமாக இருந்தது. இதற்கு சீடர்கள் கண்டுபிடித்த முறை தான், கடிதங்கள். தாங்கள் நற்செய்தி அறிவித்து, கிறிஸ்துவில் உறுதிப்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்கள் அவ்வப்போது, கடிதங்களை எழுதி, அவர்கள் தொடர்ந்து விசுவாசத்தில் வளர்வதற்கு, துணைநின்றனர். அப்படிப்பட்ட கடிதம் தான், இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு தரப்படுகிறது.
இந்த திருமுகத்தில் பேதுரு மக்களுக்கு பல அறிவுரைகளைச் சொல்கிறார். குறிப்பாக, கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படும் கவலைகளையும், சோதனைகளையும் அவர் விளக்கிக் கூறுகிறார். குறிப்பாக தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய முக்கியத்துவத்தை அவர் விளக்குகிறார். நம்மை சோதிப்பதற்கும், நாம் கொண்டிருக்கிற விசுவாசத்திலிருந்து அடிபிறழச் செய்வதற்கும், அலகை காத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் விசுவாசத்தளர்ச்சி வருகிற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்துவதற்காக அலகை காத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெற்றி பெற வேண்டுமென்றால், கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தில் பற்றுறுதியோடு இருக்க வேண்டும். அப்படி பற்றுறுதியோடு இருக்கிறபோது, நாம் கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்று அறிவுறுத்துகிறார். சோதனை என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். அந்த சோதனைகளைக் கண்டு பயந்து விடாமல், பற்றுறுதியோடு நாம் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தில் நிலைத்திருக்கிறபோது, இறைவன் நம்மை வழிநடத்துவார். சோதனைகளைக் கடந்து, மகிழ்ச்சியோடு வாழ நமக்கு உதவி செய்வார். அத்தகைய விசுவாசத்தில் நாம் வாழ, வளர, இறைவல்லமை வேண்டி மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்