கிறிஸ்துவின் மனநிலை
பிலிப்பியர் 2: 5 – 11
”கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்”. கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, எப்படிப்பட்ட மனநிலை கொண்டிருந்தார்? ”காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற்கு 1: 15). இது தான் இயேசுவின் மனநிலையாக இருந்தது. இயேசு இந்த உலகத்திற்கு வந்தது, மக்களை மனம் திருப்பி, இறைவனின் பக்கம் அவர்களைக் கூட்டிச் சேர்க்க வேண்டும் என்பது தான் ஆகும். எந்த மக்கள்? லூக்கா நற்செய்தியாளர் இதற்கான பதிலைத் தருகிறார். ”ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றவர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்..”.
இயேசு வருவதற்கு முன்னால், மேற்சொன்ன அனைவருமே, மற்ற போதகர்களால் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இனி அவர்களுக்கு இறையாட்சியில் இடமில்லை என்கிற நிலையே நீடித்தது. அவர்கள் சமூகத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். அவர்களைத் தீண்டுவாரும் எவருமில்லை. ஆனால், இயேசு அவர்களுக்காகவே மானிட மகன் வந்திருக்கிறார் என்று அறிவிக்கிறார். அதிகாரத்திலிருப்பவர்களையும், ஆட்சியாளர்களையும் ஆட்டம் கொள்ள வைத்த போதனை இது. எனவே தான், அவா்கள் இயேசுவை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினார்கள். எந்த எதிர்ப்பு வந்தாலும், தான் கொண்டிருந்த போதனையில் உறுதியாக இருந்தார். அந்த மனநிலை, கொள்கைத்தெளிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று பவுலடியார் நமக்கு அறிவுறுத்துகிறார்.
வாழ்வில் கிறிஸ்தவ விழுமியங்களை நாம் கொண்டிருக்கிறோம். அந்த விழுமியங்களுக்காக குரல் கொடுக்க நேரம் வருகிறபோது, நம்முடைய நிலையில் நம்மால் எப்படி முடியுமோ, அந்த அளவு நாம் குரல் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம், தீமைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை முற்றிலும், சமரசத்திற்கு இடம் கொடாமல் தவிர்க்க வேண்டும். அத்தகைய வாழ்வு வாழ, இறைவனின் அருள் வேண்டி மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்