கிறிஸ்துமஸ் பிறப்பு விழா
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒருபுறம் கொண்டாட்டம் என்கிற பெயரில் தேவையில்லாமல் பணத்தை வீண், ஆடம்பர செலவு செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் உதவிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்து பிறப்பு விழா எப்படி இருக்கப்போகிறது? என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய கேள்வி.
கிறிஸ்துமஸ் பெருவிழாவை வெறும் சடங்கோடு, ஆடம்பரங்களோடு கொண்டாடிவிட்டுச் செல்லாமல், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விழாவாக இதைக் கொண்டாடினால், அது தான் இந்த விழாவின் சிறப்பு. அதுதான், அதுதான் பாலன் இயேசுவுக்கு நாம் கொடுக்கும் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்