கிறிஸ்தவத்தின் சவால்கள்
“தூய்மையானது எதையும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம்”. தொடக்க கால திருச்சபையின் பிண்ணனியில், இதனை இரண்டுவிதமாக நாம் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, இந்த சொல்லாடல், யூதர்களால் பயன்படுத்தப்பட்டது. யூதர்களைப் பொறுத்தவரையி் கடவுளுடைய கொடைகளும், அருளும் யூதர்களுக்கு மட்டும் தான் சொந்தம். வேறு எவரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக, திருத்தூதர் பவுலின் எதிரிகளாகக் காட்டிக்கொண்டவர்கள், விருத்தசேதனம் மூலம் தான், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும், என்று உறுதியாக நம்பியவர்கள், இந்த சொல்லாடலை பயன்படுத்தினார்கள்.
இரண்டாவதாக, தொடக்ககால திருச்சபை சந்தித்த இரண்டு சவால்களோடு இது தொடர்புடையதாக இருந்தது. புறவினத்து மக்களிடையே வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு, எப்போதுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவது முதலாவது சவாலாக இருந்தது. இரண்டாவது சவால், ஒருசிலர் கிறிஸ்தவத்தையும், புறவினத்து நம்பிக்கையையும் ஒன்று சேர்த்து, ஒரு சில சமரசங்களோடு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி எடுத்தனர். இந்த இரண்டு சவால்களுக்கு மத்தியில், சொல்லப்பட்ட சொல்லாடல் தான், “தூய்மையானது எதையும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம்” என்பது. மேற்சொல்லப்பட்ட வரலாற்றுப்பிண்ணனி, குறுகிய பார்வையாக தோன்றினாலும், கிறிஸ்தவத்தின் மதிப்பீடுகளை எந்தவிதத்திலும் சிதைத்துவிடவோ, சமரசம் செய்துவிடவோ கூடாது என்பதற்கான முயற்சிதான், என்கிற பிண்ணனியில் நாம் புரிந்து கொண்டால், அது சரியான பார்வையாக இருக்கும்.
கிறிஸ்தவத்தின் விழுமியங்கள் எந்த காரணத்திலும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாதவை. அதனை சமரசம் செய்துகொண்டால், நாம் கிறிஸ்துவை விட்டு விலகிச்செல்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டுமென்றால், அவரது விழுமியங்களையும் நாம் தாங்கிப்பிடிக்க வேண்டும். சவால்களையும் சந்திக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்