காலைதோறும் ஆண்டவரது இரக்கம் புதுபிக்கப்படுகின்றன.
இன்றைய சிந்தனை
இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவரின் இரக்கம் தினந்தோறும் புதுப்பிக்கப்பட்டு அவரின் தயவால் நம்மை ஆட்கொண்டு வழிநடத்துகிறார். அவரின் அன்பும்,இரக்கமும்,இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.? எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.நீதிமொழிகள் 8 : 17.
ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை!அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்! புலம்பல் 3 : 22,23.தினமும் அவரே நம்முடைய பங்காகவும்,நம்பிக்கையாகவும் வைத்து அவர் அருளும் மீட்புக்கு அமைதியுடன் காத்திருந்து நமது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
இந்த ஜூலை மாதம் முழுதும் நம்மை கண்மணியைப்போல் காத்துக்கொண்ட தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி பலியை ஏறெடுப்போம். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் நம்மை ஒரு பொல்லாப்பும் தொடாத வகையில் காத்துக்கொண்ட அவரின் எல்லையில்லா அன்புக்கு அடிபணிவோம். கடன் பிரச்சனை, நோய்களின் போராட்டம், வேலையில்லா கஷ்டம் என எத்தனையோ தேவைகளையும்,நமக்கு தந்து இம்மட்டும் காத்து நடத்திய கடவுளுக்கு நன்றி பலியை ஏறெடுப்போம்.
நம்முடைய தேவைகளை நாம் அவரிடம் கொடுக்கும் பொழுது அவரும் நம்மை ஆராய்ந்து நாம் எண்ணுவதற்கும்,நினைப்பதற்கும் மேலாக நமக்கு தந்து அவரது இறக்கைகளின் மறைவில் வைத்து பாதுகாத்து வருகிறார். ஆண்டவரே!எங்களை உம்பால் திருப்பியருளும் நாங்களும் உம்மிடம் திரும்புவோம். முற்காலத்தே போனமாதம் இருந்தது போல இந்த மாதத்திலும் எங்கள் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து எங்கள் நாள்களை புதுப்பித்தருளும்.
அன்பின் ஆழமான இறைவா!!
உம்மையே போற்றுகிறோம்,புகழ்கிறோம்,ஆராதிக்கிறோம். எங்கள் தேவைகள் யாவையும் கொடுத்து இம்மட்டும் கிருபையாய் காத்து வந்த உமது தயவிற்கு நன்றி சொல்கிறோம். இந்த ஜூலை மாதம் முழுதும் எங்கள் ஒவ்வொருவருடனும் கூடவே இருந்து காத்து வந்ததுப்போல் இந்த ஆகஸ்டு மாதம் முழுதும் எங்களுடன் கூடவே இருந்து எங்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் சந்தித்து காத்தருள வேண்டுமாய் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அன்பின் தெய்வமே!!
ஆமென்! அல்லேலூயா!!.