காணிக்கை கொடுங்கள்! நல்லா இருப்பீர்கள்!
மாற்கு 12:38-44
இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 32ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஒரு ஊரில் ஜோசப் என்னும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடத்தில் ஆழமான பக்திகொண்டிருந்தார். அதற்கேற்றார்போல் கடவுளுடைய கட்டளைகளை தவறாது கடைப்பிடித்து வந்தார், தன்னிடம் இருப்பதை முடிந்தவரை ஏழைகளுக்கும் இறைபணிக்கும் கொடுத்துவந்தார்.
இந்த ஜோசப்பின் வீட்டுக்குப் பக்கத்தில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் யாருக்கும் ஒரு பைசாகூட கொடுக்காதவர். இப்படிப்பட்டவருடைய வீட்டுக்கு வந்த ஓர் இறையடியார் அவரிடத்தில், “நீ சேர்த்து வைத்த செல்வம் யாவும் உன் அண்டை வீட்டானாகிய ஜோசப்பைத் தான் போய் சேரும்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். இது அந்த பணக்காரருக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டுகளும் நாம் சேர்த்துவைத்த செல்வம், யாரோ ஒருவருக்குப் போவதா? போகவே கூடாது என்று, தான் சேர்த்து வைத்த செல்வமனைத்தையும் ஓர் அற்புதமான இரத்தினமாக மாற்றி, அதனைத் தன்னுடைய தலைக்கவசத்துக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, கடலுக்கு நடுவே இருந்த தீவில் இருந்த தன்னுடைய பங்களாவில் வைப்பதற்காக கப்பலில் பயணமானார்.
அவர் கடலில் பயணம் சென்றபோது சூறைக்காற்று ஓங்கி ஓங்கி வீசியது. இதனால் அந்தப் பணக்காரரின் தலைக்கவசமானது கடலுக்குள் விழுந்து, அதற்குள் இருந்த அற்புதமான இரத்தினமானது ஓர் மீனின் வயிற்றுக்குள் போனது. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை நினைத்து அந்தப் பணக்காரன் பெரிதும் வருந்தினான். இது நடந்து ஓரிரு நாட்கள் கழித்து, மீனவன் ஒருவன் கடலில் மீன்படிக்க வந்தான். அவனுடைய வலையில் இரத்தினத்தை விழுங்கிய அந்த மீன் வந்து சிக்க, அதனை அவன் மீன் சந்தையில் விற்றான்.
அன்றைக்குப் பார்த்து மீன்வாங்க வந்த ஜோசப் குறிப்பிட அந்த மீனை வாங்கி வீட்டுக்குச் சென்று, அதனை வெட்டி குழம்பு வைக்கத் தயாரானபோது அதன் வயிற்றினுள் இருந்த இரத்தினத்தைக் கண்டு, மிகவும் ஆச்சரியப்பட்டு நின்றான். பின்னர் அவன், “இறைவா! நீ தந்த இந்தக் கொடைக்கு கோடான கோடி நன்றி” என்று இறைவனைப் போற்றிப் புகழத் தொடங்கினான்.
யாராரெல்லாம் இறைவனுக்கும் அவருடைய பணிக்கும் தாராளமாகக் கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு இறைவன் தாராளமாகக் கொடுப்பார் என்னும் உண்மையை இந்தக் கதையின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
பொதுக்காலம் 32-ம் ஞாயிறு காணிக்கை கொடுப்பதன் அவசியத்தையும், காணிக்கை கொடுக்கும் போது எப்படி கடவுளின் ஆசீர் நமக்கும் நமது குடும்பத்திற்கும் கூட்டமாய் வந்து சேருகிறது என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நம்முடைய கொடுத்தல் மூன்று வடிவங்களிலே நிகழ்கிறது. இந்த மூன்றையும் நாம் செய்வது நம் கடமை.
1. காணிக்கை
நான் ஒரு பங்கில் இருக்கும்போது, ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் எத்தனை பேர் வாரம் வாரம் காணிக்கை போடுவீர்கள் என்றுக் கேட்டேன். அந்த திருப்பலியில் ஏறக்குறைய 600 பேர் இருந்தனர். 600 பேரில் வெறும் 150 நபர்களே நாங்கள் வாரம் வாரம் காணிக்கை போடுவோம் என்றனர். கேட்பதற்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு பங்கை நிர்வகிக்க வேண்டும் என்றால் அந்த பங்குத்தந்தைக்கு போதிய பணம் இருக்க வேண்டும். ஒருசில பணிகள் செய்வதற்கு பணம் வேண்டும். மறைக்கல்வி மற்றும் விடுமுறை விவிலியப் பள்ளி நடத்துவதற்கு பணம் கட்டாயத் தேவை. மற்ற சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்வதற்கு பணம் தேவை. விழாக்கள், பரிசுகள் இவைகள் அனைத்தையும் சிறப்பாக செய்வதற்கு பணம் மிகவும் அவசியமே. பணம் பங்குத்தந்தையிடம் எதுவும் கிடையாது. நம் பங்குத்தந்தை நம் பங்கிற்காக உழைக்கிறார். நாம் தான் அதை உற்சாகப்படுத்த வேண்டும். தாராளமாக உதவிகள் செய்ய வேண்டும்.
ஏழைக்கைம்பெண் தனக்கு இருந்த அத்தனையையும் கடவுளுக்காகவும் கடவுள் பணிக்காகவும் மனமுவந்து கொடுத்தார். அதைப் போல நம் குடும்பம் அதை செய்யட்டும். நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காணிக்கை போடுவோம். கொடுப்பதை புலம்பலோடு கொடுக்காமல் புன்முறுவலோடு கொடுப்போம். இறைவன் ஆசீரை அள்ளித் தருவார்.
2. நிதிகள்
நான் எமது தூத்துக்குடி மறைமாவட்டத்திலுள்ள சிறுமலர் குருடத்தில் பணிசெய்கிறேன். வாரம் வாரம் எமது மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்குச் சென்று குருமாணவர் நிதி பிரிக்கிறேன். ஒவ்வொரு பங்குத்தந்தையும் இதை சிறப்பாக ஏற்பாடு செய்கிறார்கள். எம் மக்கள் மிகவும் நிறைவாகவே தருகிறார்கள. ஒரு சுவாரசியமான நிகழ்வை உங்களாடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்கிறேன்.
ஒரு பங்கிற்கு குருமாணவர் நிதி பிரிக்க சென்ற போது வீடு வீடாகச் சென்றேன். ஒரு வீட்டில் ஒரு வயதான முதியவர் இருந்தார். அந்த பாட்டியைப் பார்த்ததும் அவரிடம் பணம் கேட்க வேண்டாம் என எனக்கு தோன்றியது. கொஞ்சம் நேரம் அவரிடம் பேசிய பிறகு சரி பாட்டி ஒரு ஜெபம் சொல்லிட்டு போயிட்டு வாரேன் என்றேன். ஜெபம் முடித்ததும் அந்த பாட்டி சாமி! இந்தாங்க இத வச்சிங்க! இது என்னால் முடிந்தது என்று சொல்லி கொஞ்சம் நாணயங்கள் கொடுத்தார். எண்ணிப் பார்த்தேன். அதில் மொத்தம் 28 ரூபாய் இருந்தது. அன்று அவரைப் பார்த்து வியந்த நான் இன்றும் அதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கிறது.
அன்புமிக்கவர்களே! ஒரு சில நிதிகள் குருமாணவர் நிதிகளைப் போன்று முதியோர் நிதி, மருத்துவ நிதி, ஏழை மாணவர் படிப்பு நிதி, மறைபரப்பு நிதி என ஒருசில நிதிகளை கொடுக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். நாம் முகம் சுளிக்கும்போதெல்லாம் இந்த ஏழைக் கைம்பெண் நம் நினைவிற்கு வர வேண்டும்.
ஏழைக்கைம்பெண் தனக்கு இருந்த அத்தனையையும் கடவுளுக்காகவும் கடவுள் பணிக்காகவும் மனமுவந்து கொடுத்தார். அதைப் போல நம் குடும்பம் அதை செய்யட்டும். நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காணிக்கை போடுவோம். கொடுப்பதை புலம்பலோடு கொடுக்காமல் புன்முறுவலோடு கொடுப்போம். இறைவன் ஆசீரை அள்ளித் தருவார்.
3. நன்கொடைகள்
ஒரு குறிப்பிட்ட மறைமாவட்டத்தில் பேராலயம் ஒன்று கட்டிக்கொண்டிருந்தார்கள். அதன் பங்குத்தந்தை மக்களுக்கு அறிவிப்பு கொடுத்தார். அன்புமக்களே! பேராலயப்பணிகளுக்கு மக்கள் தாராளமாய் நன்கொடை கொடுங்கள். உங்கள் உதவியால் இது கட்டப்பட வேண்டும். இது நம் ஆலயம் என்றார். இந்த ஆயலத்தில் நடைபெறும் ஞாயிறு திருப்பலிக்கு அந்த பகுதியைச் சார்ந்த இந்து சகோதரி தவறாமல் வருவது வழக்கம். இந்த அறிவிப்பைக் கேட்டதும் அவர் ஆலயப்பணிகளுக்கு கண்டிப்பாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அடுத்தவாரம் பங்குத்தந்தை சொன்னார் அன்புமக்களே! நான் ஒரு ஆச்சரியத்தை இப்போது உங்களிடத்தில் சொல்ல போகிறேன். என்ன ஆச்சரியம்! மக்கள் திகைத்தார்கள். நான் இரண்டு நாட்களுக்கு முன் மாலை வேளை ஆலயத்திற்கு ஜெபிக்க வந்தபோது பீடத்தின் மேல் ஒரு கவரில் பத்தாயிரம் ரூபாய் இருக்க கண்டேன். அந்த கவரின் மேல் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. தந்தையே! என் சிறு உதவி நம்முடைய ஆலயப்பணிக்காக, ஏற்றுக்கொள்ளுங்கள்”. இவ்வளவுதான். அதில் பெயர்கூட குறிப்பிடப்படவில்லை. நன்கு விசாரித்த பிறகு தெரிந்தது அது வாரம் வாரம் திருப்பலிக்கு வருகின்ற அந்த இந்து சகோதரி என்று.
அன்புமக்களே! நம் பங்கில் பல்வேறு விதமான நன்கொடைகள் திரட்டப்படுகின்றன. ஆயலம் கட்ட நன்கொடை, மண்டபம் கட்ட நன்கொடை என திரட்டும் அனைத்தும் நம் பங்கு வளர்ச்சிக்காகவே. சில சமயங்களில் பொருளாதாரத்தில் குறைந்த சில பங்கைச் சார்ந்தவர்களுக்கும் நாம் நன்கொடை கொடுக்க அழைக்கப்படுகிறோம். கொடுப்பதனால் குறைந்து போவதில்லை.
ஏழைக்கைம்பெண் தனக்கு இருந்த அத்தனையையும் கடவுளுக்காகவும் கடவுள் பணிக்காகவும் மனமுவந்து கொடுத்தார். அதைப் போல நம் குடும்பம் அதை செய்யட்டும். நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காணிக்கை போடுவோம். கொடுப்பதை புலம்பலோடு கொடுக்காமல் புன்முறுவலோடு கொடுப்போம். இறைவன் ஆசீரை அள்ளித் தருவார்.
மனதில் கேட்க…
1. ஆலயம், பங்கு இவைகளுக்கு கொடுக்கும் போது புலம்புகிறேனா? புன்முறுவல் செய்கிறேனா?
2. காணிக்கை, நிதி, நன்கொடை கொடுப்பது நல்லது? கொடுக்கும் போது கடவுளின் ஆசீரால் நல்லா இருக்கலாம் அல்லவா?
மனதில் பதிக்க
நல்லதை செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேருங்கள். தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளியுங்கள் (1திமொ 6:18)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா