காட்டிக்கொடுத்தால் என்ன தருவீர்கள்?
யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து “இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வை இன்று நாம் தியானிப்போம்.
“எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது” (லூக் 16: 13) என்ற இயேசுவின் சொற்கள் இந்த நிகழ்விலே நிறைவேறுவதைப் பார்க்கிறோம். யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான்.
பணத்துக்காக இயேசுவையும், இயேசுவின் மதிப்பீடுகளையும் காட்டிக்கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எப்பொழுதெல்லாம் பணத்தின்மீது அதிக ஆசை கொள்கிறோமோ, பணத்துக்காக பாவத்தை, குற்றங்களை, லஞ்ச ஊழல்களைச் செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். இதில் ஐயமில்லை.
பணத்தைப் போலவே, உலக இன்பங்கள், கேளிக்கைகள், பொழுதுபோக்குகள்…போன்றவை இயேசுவின் இடத்தை எடுத்துக்கொள்ளும்போதெல்லாம், நாம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். பணம் வந்தவுடன் இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசு வாய்ப்பு தேடியதைப் போல, பணமும், பதவியும், பெருமையும், ஆள்பலமும் வரும்போது, இயேசுவைக் காட்டிக்கொடுக்க வாய்ப்பு தேடுகிறோமா?
அனைத்திற்கும் மேலாக இயேசுவை அன்பு செய்யும் வரம் கேட்போம்.
மன்றாடுவோம்: சீடரால் காட்டிக்கொடுக்கப்பட்ட இயேசுவே இறைவா, பணத்துக்காக, உலக இன்பங்களுக்காக நாங்கள் உம்மைக் காட்டிக்கொடுக்கும் அவல நிலையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்வீராக. அனைத்திற்கும் மேலாக உம்மை அன்புசெய்யும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~பணி குமார்ராஜா