கவலை, செல்வம், இன்பங்கள் !
விதைப்பவர் பற்றிய உவமையைப் பலமுறை கேட்டிருக்கிறோம். நான்கு வகையான விதைகளைப் பற்றியும் தியானித்திருக்கிறோம். இன்று மூன்றாவது வகையான விதைகளைப் பற்றி மட்டும் கொஞ்சம் நம் கவனத்தில் கொள்வோம். இந்த விதைகள் முட்செடிகள் நடுவே விழுந்தன. கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன என்று கூறிய இயேசு, அதற்குரிய பொருளையும் இவ்வாறு கூறுகிறார்: முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்டும், கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
நம்மில் பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள்தானே? நாம் இறைவார்த்தையைக் கேட்கிறோம். ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இறைவார்த்தை காட்டும் பாதையிலே நாம் முதிர்ச்சி அடையமுடிவதில்லை. காரணம், கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. இங்கு கவலை என்பது உலகப் போக்கிலான கவலை: எதை உண்போம், எதைக் குடிப்போம், நாளை என்ன செய்வோம் என்பது பற்றிய அளவுக்கதிகமான அக்கறை. செல்வம் சேர்ப்பது இன்னொரு தடை. வாழ்வில் வரும் இன்பங்கள் மூன்றாவது தடை. குறிப்பாக, உணவு, பொழுதுபோக்கு, களியாட்டம்… போன்றவைதான் வாழ்வில் வரும் இன்பங்கள். இவைதாம் நாம் முதிர்ச்சி அடையாமல் தடுக்கின்றன என்கிறார் ஆண்டவர். எனவே, உலகக் கவலை, செல்வம், தொலைக்காட்சி, கிரிக்கெட் போன்ற உலக இன்பங்களில் நாம் மூழ்கிவிடாமல், இறைவார்த்தை நம்மில் முதிர்ச்சி அடைய செபத்துக்கும், இறைப்பணியில் ஈடுபடுவதற்கும் நம் வாழ்வில் போதுமான நேரத்தை ஒதுக்க முன் வருவோம்.
மன்றாடுவோம்: இன்பத்தின் ஊற்றே இறைவா, உலக இன்பங்களும், கவலைகளும், செல்வத்தின்மீது அளவுகடந்த ஆர்வமும் நான் இறைவார்த்தையின்படி வாழாதபடி நெருக்கிவிடுகின்றன என்று எடுத்துச் சொன்னதற்காக நன்றி. உலக இன்பங்களைவிட, நீர் தரும் ஆறுதலும், உம்மோடு;, உமக்காக செலவழிக்கும் நேரமும் எவ்வளவோ மேலானவை என்பதை நான் உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா