கவனிக்காதே, கடைப்பிடிக்காதே
லூக்கா 11:42-46
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
வழக்கமாக பல்வேறு விதமான போதனைகளை நற்செய்தியில் தந்து நம் வாழ்வை சீராக்க, நேராக்க அழைக்கும் நம் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் இருவரை சுட்டிக்காட்டி அவர்களைப் போன்று வாழ வேண்டாம், அவர்களை கவனிக்கவும் வேண்டாம், அவர்கள் செய்வதை கடைப்பிடிக்கவும் வேண்டாம் என்கிறார். அந்த இருவர் யார்? ஏன் அவர்கள் செய்வது போன்று செய்யக் கூடாது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. வாருங்கள் பார்ப்போம்.
1. பரிசேயர்
மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் நீதியை பரிசேயர்கள் கடைப்பிடிக்கவில்லை. கடவுளின் அன்பை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை. அவற்றை எல்லாம் மிக எளிதாக விட்டுவிட்டனர். கடவுளுக்கு விருப்பம் இல்லாததை அவா்கள் விரும்பினார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தைவெளியில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்பினார்கள். நீங்கள் பரிசுத்தமான பரிசேயர்கள் அல்ல மாறாக இருளாய்ப்போன இருட்டு கல்லறைகள் என மிக வன்மையாக சாடுகிறார் இயேசு.
2. திருச்சட்ட அறிஞர்
ஆண்டவர் இயேசு அதிகமாக அன்பு செய்த சாதராண, எளிய மக்களை திருச்சட்ட அறிஞர்கள் மிகவும் வாட்டி வதைத்தனர். தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்தினர். ஆனால் அந்த சுமைகளை ஒரு விரலால் கூட அவர்கள் தொடவில்லை. திருமிகு திருச்சட்ட அறிஞராக இருக்க வேண்டிய இவர்கள் திருட்டு உள்ளங்களாக சுற்றித் திரிந்தனர்.
மனதில் கேட்க…
1. என் வாழ்க்கை எத்தனை பேருக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது?
2. என்னை யாராவது பின்பற்றக் கூடிய அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேனா?
மனதில் பதிக்க…
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாக இருக்கட்டும். என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாக இருக்கட்டும்.(திபா 19:14)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா