கல்… கடைப்பிடி… கற்றுக்கொடு
லூக்கா 8:19-21
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இறைவார்த்தையின் மீதுள்ள நமது ஆர்வம் என்ன என்பதை பரிசோதித்துப் பார்க்கும் வண்ணமாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறைவார்த்தையை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். இறைவார்த்தையை அதிகம் அன்பு செய்பவர்களே இயேசுவின் உண்மையான உறவினர்கள் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார். இயேசுவின் உண்மையான உறவினராக மாற மூன்று பயிற்சிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
1. கல்
இறைவார்த்தையை நன்றாக வாசிக்க வேண்டும். தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரை வாசித்திருக்கிறோமா? திருவிவிலியம் தான் நம் ஆன்மாவின் மீட்பிற்கான நூல். ஏன் இன்னும் வாசிக்கவில்லை? திருவிலியத்தை வாசிக்காமால் இயேசுவை நெருங்க முடியாது தெரியுமா?
2. கடைப்பிடி
இறைவார்த்தையை நன்கு வாசித்த நாம் கடைப்பிடிக்க வேண்டும். இறைவார்த்தை தான் வாழ்வு அளிக்கும் என்ற எண்ணத்துடன் இறைவார்த்தையின் படி நடக்க வேண்டும். இறைவார்த்தையின் படி நடந்தால் மட்டுமே நன்மை செய்ய முடியும்.
3. கற்றுக்கொடு
பிறர் திருவிவிலியத்தை வாசித்து தியானிக்க நாம் ஒரு ஊக்குவிப்பாளர்களாக செயல்பட வேண்டும். குடும்பங்களில், அன்பியங்களில் மற்றும் பங்கில் அடுத்தவர் ஆண்டவர் வார்த்தையின் மீது ஆசை கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும். கற்றுக்கொடுக்க வேண்டும்.
மனதில் கேட்க…
1. என்னுடைய திருவிவிலியத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்துகிறேன்?
2. இயேசுவின் உண்மையான உறவினர் என்பதன் அர்த்தம் எனக்கு புரிகிறதா?
மனதில் பதிக்க…
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்(லூக் 8:21)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா