கல்வாரியின் அன்பு
இந்த உலகத்தில் உள்ள சுவாசமுள்ள யாவும் தம்மை படைத்த கடவுள் மேல் அன்பு கொண்டுள்ளது. அதிகாலையில் எழுந்து பாருங்கள். ஒவ்வொரு பறவை இனங்களும் என்ன அழகாக கூவி ஆண்டவரை போற்றுகிறது. தெருவில் திரியும் ஒரு நாய்க்கு என்றாவது ஒருநாள் சாப்பாடு போட்டால் அது நம்மை பார்க்கும்பொழுது அழகாக வாலை ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தும். மனிதர்கள் முதல்கொண்டு எல்லா ஜீவராசிகளும் தம்மை படைத்த கடவுளுக்கு அன்பை வெளிப்படுத்தி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதனால்தான் கடவுளும், தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு தன் சொந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16.
நமக்கு தண்டனை, தீர்ப்பு அளிக்க அல்ல. தமது மகன்மூலம் நம்மை மீட்கவே கடவுள் தமது மகனை உலகிற்கு அனுப்பினார். நீங்கள் யாராயிருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும்தனது உயிரை கல்வாரியில் ஒப்புக்கொடுத்து அடிமையின் கோலம் எடுத்து அவரின் இரத்தத்தால் நம்மை சம்பாரித்துள்ளார். ஆனால் நாமோ அதை உணராமல் அந்த கல்வாரியின் நாதரை உற்றுப்பார்க்க மனம் இல்லாமல் கால் போன போக்கில் போய்க்கொண்டு இருக்கிறோம். அன்பு என்றால் என்னவென்று அறியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.
கடவுள் ஏன் அடிமைக்கோலம் எடுக்க வேண்டும். அவர் நினைத்திருந்தால் ஒரு ராஜாவாகவோ, அல்லது எல்லோரையும் அடிமைப்படுத்துவராகவும் வந்திருக்கலாமே! நான்தான் கடவுள் எல்லோரும் என்னை பணிந்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரம் செய்யலாமே? ஏன் அவர் மனித அவதாரம் எடுத்து தமது சதையை பிய்த்து கொடுத்து தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து, தனது கால்களிலும், கைகளிலும் ஆணியால் அடிக்கப்பட்டு அது போதாது என்று ஈட்டியால் விலாவிலே குத்தப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் சிந்தி தம் ஜீவனை கொடுக்க வேண்டும்? ஏனெனில் அவர் நம்மேல் வைத்த அன்பு மாத்திரமே காரணம்.
அன்பானவர்களே! நாம் நமக்கு ஏதாவது ஒரு சின்ன வலி வந்தாலே எப்படி துடிக்கிறோம். அந்த வலி யார் மூலம் ஏற்பட்டதோ அவர்களை உடனே திட்டுகிறோம் அல்லது சபிக்கிறோம். ஆனால் இயேசுவை பாருங்கள். அந்த வலியிலும் தான் இறந்த பிறகு எங்கே தமது தாயார் துக்கப்படுவார்களோ என்று அறிந்து தமது தாயாரை நோக்கி அம்மா கவலைப்படாதீர்கள். இதோ உங்கள் இன்னொரு மகன் என்று தான் மிகவும் நேசித்த யோவானிடம் ஒப்படைக்கிறார். அதே மாதிரி யோவானை நோக்கி இதோ உமது தாய் என்று ஒப்படைக்கிறார். அந்த வலியிலும், வேதனையிலும் தன்னைப்பற்றி கவலைப்படாமல் தான் அன்பு செய்தவர்களை குறித்தே கவலைப்படுகிறார். அதுமட்டுமா? தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக தமது தந்தையிடம் பிதாவே! இவர்களுக்கு மன்னியும், ஏனெனில் இவர்கள் அறியாமல் இந்த தவறை செய்கிறார்கள்.என் உயிர் போனாலும் பரவாயில்லை இவர்களுக்கு ஒரு தண்டனையும் வேண்டாம் என்று தம்மை வேதனைப்படுத்தியவர்களுக்காகவும் வேண்டுதல் செய்கிறார். எந்த கடவுளாவது இதுமாதிரி செய்திருக்கிறார்களா? சிந்தியுங்கள். இவரே உண்மை தெய்வம் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.
இயேசு தம்மை சிலுவையில் அடிக்க ஒப்புக்கொடுத்த காரணம் நம்முடைய பாவத்துக்காகவும், அக்கிரமத்துக்காகவும் தான் என்று உணர்வடையுங்கள். நம் குற்றங்களுக்காக காயப்பட்டார். நம் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். நாம் ஒவ்வொருவரும் நல்ல சுகத்தோடும், நிம்மதியோடும் வாழ அவர் காயப்பட்டார். அந்த காயங்களால் நாம் நல்ல சுகம் பெற்று குணமாகிறோம். எசாயா 53:5.
பிரியமானவர்களே! நீங்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை. ஒரு நிமிஷம் உங்கள் கண்முன் உங்களுக்காக சிலுவையில் இரத்தத்தோடும், காயங்களோடும் தொங்கிக்கொண்டு இருக்கும் அவரை நோக்கி பாருங்கள். அவர் உங்களை நோக்கி என் மகனே! என் மகளே! என்று ஏக்கத்தோடு உங்களை கூப்பிடுவது உங்களுக்கு கேட்கவில்லையா? இன்னும் கண் இருந்து காணாமல், காது இருந்தும் கேட்காமல் உங்கள் இதயத்தில் உணராமலும் இருக்க போகிறீர்களா? உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இந்த கல்வாரி அன்பை நோக்கி பாருங்கள். அவர் ஏக்கத்தை உணர்ந்துக் கொள்ளுங்கள். இதை வாசிக்கும் யாவரும் அவரின் அன்பை ருசிக்க வேண்டுமாய் நானும் வேண்டிக்கொள்கிறேன். மனிதர்களின் அன்போ மாறிவிடும். ஆனால் நம் இயேசுவின் அன்போ, கல்வாரியின் அன்போ! ஒருபோதும் மாறாது, மறையாது.
மண்ணில் இருந்து புல் முளைக்கும்,
நம் மனதில் இருந்து அன்பு முளைக்கும்,
புல்லை மழைநீர் காப்பாற்றும்,
நம் மனதின் அன்பை நம்பிக்கை காப்பாற்றும்,
நம் அறிவு நமக்கு இறுமாப்பை உண்டாக்கும்,
ஆனால் [கல்வாரியின்] அன்போ! பக்தியையும்,உறவையும், உண்டாக்கும்.
சிலுவையில் தொங்கும் அன்புக்கு பேச்சும் இல்லை, இப்பொழுது வார்த்தையும் இல்லை. அதை உற்றுநோக்கும் ஒவ்வொருவரின் உடலையும் நெகிழச் செய்யும். இதயம் ஆனந்த கவிப்பாடும்.
ஜெபம்:
அன்பே உருவான இயேசுவே, உம்முடைய தலைமுதல் பாதம் வரைக்கும் நீர் அன்பினால் நிறைந்து இருப்பது போல எங்களையும் உமது அன்பினால் நிரப்பும். உம்மைப்போல் வாழ கற்றுத்தாரும். எங்களை காயப்படுத்துவர்களை நாங்கள் முழு உள்ளத்தோடு மன்னித்து அவர்களை அன்போடும், பாசத்தோடும் நேசிக்கும் நல்ல குணத்தை இன்று எங்களுக்கு தாரும். நீர் கல்வாரி சிலுவையின் மூலம் சம்பாதித்த உறவுகளை நாங்களும் எங்களை நேசிப்பது போல்
அவர்களையும் நேசிக்கும் பண்பை எங்களுக்கு இன்று அளித்தருளும். உமது அன்பினால் இந்த உலகத்தை அசைத்ததுபோல நாங்களும் உலகத்தை அசைத்து உமது பிள்ளைகள் என்று நிரூபிக்க உதவி செய்யும். எல்லாவற்றிலும் உமக்கே மகிமை, புகழ், மாட்சிமை உண்டாகட்டும்.
ஆமென்!!அல்லேலூயா!!!.