கலக்கத்தைக் கலகலப்பாக்க! (லூக்கா 24 : 35-48)
அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம்,
இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு தனது சீடர்களை விட்டுவிட விரும்பவில்லை. அவர் தனது மந்தையில் தொலைந்த ஓர் ஆட்டினைக் கூட தேடி வருபவர் இல்லையா? ஆனால் இங்கு நூறு ஆடுகளுமே தொலைந்து, துவண்டு போயல்லவா கிடக்கின்றது. அவர்களைத் தேற்ற, உற்சாகப்படுத்த, கலக்கங்களை, குழப்பங்களை தெளிவுபடுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார். ஆண்டவர் பலவீனங்களை ‘பலமாக’ மாற்றுகிறார். அவர்களின் கலக்கத்தைக் கலகலப்பாக மாற்றுகிறார். அவர்களின் அச்சத்தை அஞ்சாமையாக்குகின்றார். மகிழ்ச்சியால் அவர்கள் நிரம்புகிறார்கள்.
நம் ஆண்டவரின் உயிர்ப்பு இத்தகைய மாற்றத்தை நம்மில் உருவாக்கட்டும், நம் உரு மாறட்டும்.
– திருத்தொண்டர் வளன் அரசு