கர்த்தர் வெறுக்கும் காரியங்களை நாம் செய்யாமல் இருப்போம்.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நாம் ஆண்டவர் விரும்பும் காரியங்களில் நடந்து அவர் ஒருவருக்கே மகிமை உண்டாக வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற ஒன்றுபடுவோம். நாம் ஒருவரோடு ஒருவர் உண்மையாய் இருப்போம். நாம் வாழும் வாழ்க்கை நீதியாகவும், நல்லுறவுக்கு வழி கோலுவதாகவும் இருக்கட்டும். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமைசெய்ய மனத்தாலும் நினைக்காமலும், பொய்யாணை இடுவதையும் தவிர்ப்போம். ஏனெனில் இவைகளை நமது ஆண்டவர் வெறுக்கிறார். செக்கரியா 8 – 16 ,17.
நீதியை விதைப்போம்,அன்பின் கனியை அறுவடை செய்வோம். ஆணவத்தையும், இறுமாப்பையும், தீமையையும், உருட்டையும், புரட்டையும் கர்த்தர் வெறுக்கிறார். கடவுள் நேர்மையாளரையும், பொல்லாரையும் சோதித்தறிகிறார். வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கிறார். நேர்மையுடன் நீதி வழங்கவும், ஒருவருக்கொருவர் அன்பும், கருணையும் காட்டுவோம். நம்முடைய சகோதரருக்கு எதிராக தீமைசெய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம். ஆவியானவர் வாயிலாக நமது ஆண்டவர் போதிக்கும் திருச்சட்டத்தையும், வாக்குகளையும் கேட்டும் நமது இதயத்தை கடினப்படுத்தாதபடிக்கு ஆண்டவரின் வார்த்தைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு கட்டளையிடும் காரியங்களை நாம் செய்யாவிட்டால் நமது வேண்டுதலையும், விண்ணப்பத்தையும்,ஆண்டவர் எவ்வாறு நிறைவேற்றுவார்? ஆகையால் அவருக்கு பயந்து, கீழ்படிந்து அவரின் வார்த்தைகளுக்கு அவர் பாதம் பணிவோம்.
நாம் செய்யும் இன்னொரு காரியம் உண்டு. ஆண்டவரின் பலிபீடத்தை கண்ணீரால் நிரப்புகிறோம், ஆனால் அவரின் வார்த்தைக்கு கீழ்படிவதில்லை. ஆண்டவர் கேட்கிறார், உனக்கும், உன் மனைவிக்கும் உன்இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு நான் சாட்சியாய் இருந்தேன். அப்படியிருந்தும் உன் துணைவியும், உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கை துரோகம் செய்யலாமா? உங்களை ஒன்றாய் இணைத்தவர் நானல்லவா, வாழ்வின் ஆவியும் நானே, ஆகையால் எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக. ஏனெனில் மணமுறிவை நான் வெறுக்கிறேன் என்று நம்முடைய இஸ்ரேலின் ஆண்டவரும்,மீட்பருமானவர் சொல்கிறார். மலாக்கி 2:13 to 16.
நாம் வேதத்தை வாசிப்பவர்களாய் மாத்திரம் இல்லாமல் அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து நடந்தோமானால் அப்பொழுது நாம் ஏறெடுக்கும் சகல விண்ணப்பத்தையும்,
ஜெபத்தையும் கேட்டு நாம் விரும்புகிற காரியத்தை கொடுத்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். நம்மேல் கண்ணை வைத்து ஆலோசனை அருளி, நித்திய வாழ்வை பெற்றிட நமக்கு அறிவையும், புத்தியையும், ஞானத்தையும் கட்டளையிடுவார். ஆகையால் நாம் கர்த்தர் வெறுக்கும் எந்த காரியத்தையும் செய்யாமல் நம்மை பாதுக்காத்துக்கொள்வோம்.
ஜெபம்.
அன்பின் தகப்பனே! உம்மையே போற்றுகிறோம், ஆராதிக்கிறோம். நீர் எங்களுக்காக கல்வாரி சிலுவையில் உமது உயிரை கொடுத்து எங்களை மீட்டுக்கொண்டீர். உமது இரத்தத்தால் எங்களை கழுவி நாங்கள் உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிக்கு எங்களை பாதுக்காத்துக்கொள்ளும். நீர் வெறுக்கும் எந்த ஒரு காரியத்தையும், செய்யாதபடிக்கு காத்துக்கொள்ளும். எங்கள் பெலவீனத்தில் நாங்கள் தவறு செய்யாதபடிக்கு உமது பெலத்தை அளித்தருளும். எங்களுக்கு விரோதமாய் உருவாகும் எந்த ஒரு செயலும் நடைபெறாமல் நீர் தாமே உமது செட்டைகளின் நிழலில் மூடி பாதுக்காத்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜெபம் கேட்கும் பரம தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!