கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமொழிகள் 18:10
ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை.அவருக்கு அஞ்சி நடப்பவர் அதற்குள் சென்று அடைக்கலம் பெறுவார். நீதிமொழிகள் 18:10.ல் வாசிக்கிறோம். அவருடைய பெயரை நாம் உச்சரித்தாலே நமக்கு மிகுந்த சமாதானமும், சந்தோசமும் உண்டு. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச் செய்து உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமை படுத்துவாய் சங்கீதம் 50:15ல் உள்ளபடி அவரை யே அண்டிக்கொண்டு சுகமாயிருப்போம்
ஒரு குழந்தை எப்படி ஒரு வேற்று மனிதரை கண்டால் தன் தாயிடம் ஓடி தமது முகத்தை மறைத்து அவர்களை இருக்க அணைத்துக்கொள்ளுமோ, நாமும் ஒரு குழந்தையாய் ஆண்டவரின் பாதங்களை இறுகப்பற்றிக்கொண்டு அவரிடம் அடைக்கலம் புகுந்தால் நம்மை எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி காத்துக் கொள்வார்.
கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தி அவரிடம் தஞ்சம் புகுந்தால் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தி ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஏனெனில் அவர் நம்மேல் கவலைக்கொண்டு நம்மை விசாரிக்கிற ஆண்டவர். நமது கவலை எல்லாம் அவரிடம் ஒப்புக்கொடுத்து அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம்.
நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர் பதில் அளிப்பார். அவரின் பெயர் நம்மை பாதுகாக்கும். நமது மனம் விரும்புவதை நமக்கு தந்தருள்வார். நமது திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவார். திருப்பாடல்கள் 20:4ல் வாசிக்கிறோம். நாம் ஒவ்வொருநாளும் நமது தேவைகள் அனைத்தையும் அவரிடம் சொல்லி ஜெபித்து அவரின் பாதத்தில் சமர்ப்பித்து நம் தேவைகள் யாவையும் பெற்றுக்கொள்வோமாக!
ஜெபம்
வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய இறைவா! உம்மை போற்றி ஆராதிக்கிறோம். உமது நாமம் எங்களுக்கு பலத்த துருகமாய் இருப்பதால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்மிடத்தில் வருபவர்களை நீர் ஒருபோதும் புறம்பே தள்ளிவிடுவதில்லை. அதற்காக உமக்கு நன்றி சொல்கிறோம். உமக்கு பயந்தவர்களுக்கு நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதம் மிகப்பெரியது. நீர் ஆள் பார்த்து செயல்படும் தேவன் அல்ல. எல்லா மக்களும் உமது அன்பை பெற்றுக்கொண்டு நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள வேண்டுமாய் உம்மிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம்.ஆமென்! அல்லேலூயா!!!.