கண்ணின் மணியென நம்மை காத்தருளினார்.இ.சட்டம் 32:10
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இன்றும் நம் ஆண்டவராகிய இயேசு நம்மை வழிநடத்தும் விதம் ஆச்சரியமானது, அதிசயமானது. நமது ஆண்டவர் வானங்களுடன் பேசும்பொழுது அவை செவிகொடுக்குமாம். பூமியானது அவரின்
சொல்லை உற்றுநோக்குமாம். பெருமழை பயிர்கள் மேல் பொழிவது போலவும், தென்றல் பசும்புல் மீது வீசுவதுபோலவும், நம் ஆண்டவரின் அறிவுரை மழையெனவும், அவரின் சொற்கள் பனியெனவும் இறங்கும். உயிரற்ற அவைகளுடன் பேசும் ஆண்டவர் நம்மோடும் பேசி நம் தேவைகளை சந்தித்து, நம்மை அவரின் கண்ணின் மணியைப்போல் காப்பார் என்பதில் சந்தேகம் உண்டோ!
இதோ!அவருடைய மக்களை அவரின் வல்லமையால் நிரப்பி, தமது மக்களோடு உடன்படிக்கை செய்து அவரின் திருச்சட்டத்தை நம் இதயத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவரின் இதயத்தின் திட்டங்களை நம்மில் வைத்து செயலாக்கி நிறைவேற்றுவார். தியத்தீரா நகரைச் சேர்ந்த பெண் லீதியா பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளும்படி ஆண்டவர் அவள் உள்ளத்தை திறந்ததுபோல் இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயமும் திறக்கப்பட்டு ஆண்டவரை முழுதும் நம்பி, அவரையே பிடித்துக்கொண்டால் அவர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார். தி.ப.16:14.
ஆண்டவர் நம்மை அழைத்த அழைப்பின் நோக்கத்தை புரிந்து நாம் செயல்பட்டு அதன்படியே வாழ்ந்து அவரின் சித்தத்தை செய்து அவருக்கே மகிமை சேர்ப்போம். அப்பொழுது அவர் நமக்கு முன்னே செல்வார். நம்மோடும் இருப்பார். நம்மை விட்டு விலகவும் மாட்டார். கைவிடவும் மாட்டார். நம்மில் இருந்து எல்லா நோய்களையும், கடன்பிரச்சனையில் இருந்தும், வறுமையில் இருந்தும் பாதுக்காத்து நம்மை மீட்டெடுப்பார். அவர் தமது பிள்ளைகளுக்காகவும், தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்காகவும் அவரே பழி வாங்குவார். அவர் தமது பகைவர்களுக்கு பதிலடி கொடுப்பார். நம் வாழ்நாள் முழுதும் பாதுகாத்து கண்ணின் மணியென காத்தருள்வார்.
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கும் பரம தகப்பனே உமக்கு நன்றிபலி ஏறேடுக்குறோம். நீர் எங்களை உமது கண்ணின் மணியென பாதுகாத்து இம்மட்டும் கிருபையாய் வழிநடத்திய தெய்வம் இனிமேலும் வழிநடத்துவீர் என்று அறிந்திருக்கிறோம். உமது பாதுகாப்பில் நாங்கள் நிலைத்திருந்து உம்மிடத்தில் அடைக்கலம் புகுகிறோம். உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க செய்து எங்கள்மேல் கிருபையாயிரம். உமது முகத்தை எங்கள்மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமாதானம் கட்டளையிடும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே! ஆமென்!!அல்லேலூயா!!!.