கண்டித்து திருத்தும் நம் ஆண்டவர்
அன்பானவர்களே!!! நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையில் நமக்கு எது முக்கியம் என்று தெரியாமல் அநேக காரியங்களில் தலையிட்டு சில சமயங்களில் நமக்கு நாமே எதிரி என்று சொல்லும் அளவுக்கு நம் எண்ணங்களும்,செயல்களும்,சில நேரங்களில் பொல்லாதவனவாக
மாறிவிடுகிறது.
அதனால்தான் நம்முடைய தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார். ஏனெனில் எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காக பரிந்து பேசுகிறார். உள்ளங்களை துருவி ஆயும் கடவுள் தூயஆவியாரின் மனநிலையை அறிவதால் கடவுளுக்கு உகந்த முறையில் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியத்தை நமக்கு தெளிவாக புரியவைக்கிறார். ரோமையர் 8:26-27 .
ஒருசில நேரங்களில் நாம் வேண்டிக்கொள்வது நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம் மனம் சோர்ந்து போகிறோம். இல்லை பிரியமானவர்களே!! அதைவிட மேலான பெரிய காரியத்தை தரும்படிக்கே கடவுள் சமயத்தில் நாம் கேட்டதை உடனே கொடுப்பதில்லை. அதைப்பெற்றுக்கொள்ள நம்மை தகுதி படுத்துவார். நாம்தான் பொறுமை இல்லாமல் அநேக வேளைகளில் முறுமுறுத்து விடுகிறோம். அழியும் இந்த உலகத்தில் சாதாரண ஒரு டிகிரி படிப்பு படிக்க எத்தனை வருஷம் படிக்க வேண்டியுள்ளது. கடவுளின் இரகசியத்தை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவசரப்பட்டால் எப்படி கிடைக்கும்.
ஒரு சிறு குழந்தையிடம் எந்த தாயாவது விளையாட கத்தியை கொடுப்பார்களா? குழந்தை எத்தனை அடம்பிடித்து கேட்டாலும் கொடுப்போமா? அதுபோலத்தான் நம் ஆண்டவரும் நாம் கேட்கும் காரியத்தை அதற்கேற்ற நாள், சூழ்நிலை, வரும்பொழுது நிச்சயம் கொடுப்பார். சில சமயங்களில் அந்த காரியம் நமக்கு தேவைப்படாவிட்டால் நாம் அடம்பிடித்து கேட்டாலும் தராமல் நாம் புரிந்து செயல்பட வேண்டுமாய் நினைத்து நம்மை கண்டித்தும், திருத்தியும், உணர்த்துவார். எனவே ஆண்டவரின் திருவுளச்சித்தப்படி கேட்டு பெற்று ஆசீர்வாதத்துடன் வாழ கற்றுக்கொள்வோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்பின் பரம தகப்பனே எங்களுக்காக சிலுவை சுமந்து எங்கள் பாவங்களை ஏற்றுக்கொன்டவரே,உம்மை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். நாங்கள் வேண்டிக்கொள்ள வேண்டியதை அறியாமல் இருக்கும் பட்சத்தில் எங்களுக்காக எல்லா காரியத்தையும் நடப்பித்து வலக்கரம் பிடித்து வழி நடத்த வேண்டுமாய் விரும்பி வேண்டி நிற்கிறோம்.
ஆமென்!! அல்லேலூயா!!!.